செய்திகள்

தொழிலாளர்கள் நலமுடன் வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்: எடப்பாடி பழனிசாமி ‘மே’ தின வாழ்த்து

சென்னை, ஏப்.30–

தொழிலாளர்களுக்கு ‘மே’ தின வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ‘‘மே தின” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

உழைப்பின் மேன்மையையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ‘‘மே தின’’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கணக்கில்லா வேலை நேரம், கொத்தடிமைத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர் பெருமக்கள் பல ஆண்டுகளாகப் போராடி, தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த தினமே மே தினம் ஆகும்.

தொழிலாளர் பெருமக்கள் சிந்திய ரத்தத்தாலும், வியர்வையாலும் தான் இன்றைய நவீன உலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் உழைப்பு போற்றுதற்குரியதாகும்.

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான இந்த இனிய நாளில், தொழிலாளர்கள் நலமுடனும் வளமுடனும் மகிழ்வாக வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, எனது அன்பிற்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ‘‘மே தின” நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *