செய்திகள்

தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாக தி.மு.க. அரசு விளங்கும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை, மே.1–

“தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசாகத் தி.மு.க அரசு விளங்கும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.

‘மே’ தினத்தையொட்டி இன்று (1–ந் தேதி) சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவர் சிவப்பு சட்டடை அணிந்து வந்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் மே நாள் வாழ்த்துரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– தொழிலாளர்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்ல, – தொழிலாளர்களை வாழவைக்கும் அரசாகவும் இன்றைக்கு தி.மு.க. அரசு இருந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வின் ஆட்சியே ஏழை, எளிய, பாட்டாளி பெருமக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான்.

உதாரணத்திற்கு சிலவற்றை மாத்திரம் நான் இங்கு நினைவுப்படுத்த வேண்டியதை என் கடமையாக நான் கருதுகிறேன்.

* குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தது தி.மு.க.

* ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் அமைத்து தந்ததும் தி.மு.க.

* நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் தங்கி வாழ்வதற்கு இல்லங்கள் அமைத்து தந்தது. அதேபோல் தொழுநோயாளிகளுக்கு இல்லம் அமைத்து தந்தது தி.மு.க.

கண்ணொளி திட்டம்

* ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம் தொடங்கியதும் தி.மு.க.

* விதவைகள் மறுவாழ்விற்கு நிதி வழங்கியதும் தி.மு.க.

* தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்கியதும் தி.மு.க.

* விவசாய தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம் அமைத்தது தி.மு.க.

* நகர்ப்புறத் தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் அமைத்ததும் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில்தான்.

* விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தம் ஆக்கித் தந்ததும் தி.மு.க. – குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டு வந்ததும் தி.மு.க.

* மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்து, அதற்கு மாற்றாக சைக்கிள் ரிக்‌ஷாவை அறிமுகப்படுத்தியதும் தி.மு.க.

* இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததும் தி.மு.க.

உழவர் சந்தை

* மாணவருக்கு இலவசப் பேருந்து பாஸ் வழங்கியதும் தி.மு.க.

* அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தியதும் தி.மு.க.

* அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்ததும் தி.மு.க.

* உழவர் சந்தைகள் உருவாக்கித் தந்ததும் தி.மு.க.

* எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து, ஒற்றுமையோடு, ஒருமித்த கருத்தோடு அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றித்தந்ததும் தி.மு.க.

அந்தளவிற்கு ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, ஏழை – எளிய, தொழிலாளத் தோழர்களுக்கான ஆட்சியாக தமிழக ஆட்சியை வடிவமைத்துக் கொடுத்தவர் கலைஞர். இந்த ஓராண்டு காலத்தில் தொழிலாளர் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம் – தீட்டிக் கொண்டிருக்கிறோம் – இன்னும் தீட்டப்போகிறோம்.

என்னுடைய மனதிற்கு நிறைவான பணிகளாக இவை அமைந்திருக்கிறது.

இருக்கை வசதி

* பணிநேரம் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றி வரும் தொழிலாளர்களது துயர் துடைக்க இருக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அரசு நம்முடைய அரசு.

* அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினராக இருக்கும் 500 மகளிருக்கு ஆட்டோ ரிக்‌ஷா வழங்கிட ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது நம்முடைய ஆட்சி.

* அமைப்பு சாரா வாரியங்களில் உறுப்பினர்களாக இருந்த தொழிலாளர்களுக்குக் கடந்த ஆட்சியில் நிலுவையாக வைக்கப்பட்ட உதவிகள் அனைத்தையும் நிலுவையில்லாமல் வழங்கியதும் இந்த அரசுதான்.

விபத்து உதவித்தொகை:

ரூ.1 லட்சம்

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தொழிலாளர்களுக்கு விபத்து உதவித் தொகையாக 1 லட்சம் ரூபாய் இருந்ததை 2 லட்சம் ரூபாய் ஆக்கியது தி.மு.க. ஆட்சிதான்.

* கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகையை 6 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தித் தந்துள்ளது நமது அரசு.

* கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகையாக இதுவரை ஆண்களுக்கு 3 ஆயிரம், மகளிருக்கு 5 ஆயிரம் என இருந்தது. அதனை அனைவருக்கும் 20 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும் என அறிவித்திருக்கிறோம்.

* 18 அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களிலும் கடந்த ஓராண்டில் மட்டும் 1,35,660 பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்டங்களின்கீழ் 247 கோடி ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுவசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

* 6 முதல் 9–ம் வகுப்பு வரை பயிலும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

தோழர் என்று அழை: பெரியார் சொன்னார்

-90 ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் ஒருவரை ஒருவர் ‘தோழர்’ என்று அழைக்கவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.

1930-–ம் ஆண்டிலேயே மே தினத்தைக் கொண்டாடியவர் தந்தை பெரியார்.

அதற்குப்பிறகு சோவியத் யூனியனுக்குப் பயணம் போய் வந்து லெனின், மாஸ்கோ, ரஷ்யா என்று தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியவர் பெரியார்.

அந்த வழியில்தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டினார் கலைஞர்.

எனது தலைமையிலான நமது அரசு, இது தோழர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் அரசாகத்தான் இருக்கும் – தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்த மே தினப் பூங்காவில் தொழிலாளர்களின் சின்னமாக இருக்கும் இந்த மே தின நினைவுத் சின்னத்தை இங்கு அமைந்திருக்கிறோம் என்றால், இதனை அமைத்துத் தந்தவரும் கலைஞர் தான் என்பது உங்களுக்கு தெரியும்.

தொழிலாளர்களைப் போற்றுவோம்

சட்டமன்றத்தில் அன்றைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டபிள்யூ.ஆர். வரதராஜன், முதலமைச்சராக இருந்த கலைஞரிடத்தில் ஒரு கோரிக்கை வைத்தார்.

மே தினத்தையொட்டி, அந்த மே தினப் பூங்காவில் ஒரு நினைவுச்சின்னம் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை வைத்த உடனே, அதை ஏற்றுக்கொண்டவர் கலைஞர். அவ்வாறு ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, மறுநாளே இந்த இடத்திற்கு வந்து, சுற்றிப்பார்த்து, பார்வையிட்டு எந்த இடத்தில் வைக்கலாம் என்று அதிகாரிகளுடன் கலந்து பேசி, ஆய்வு செய்து உடனடியாக அந்த இடத்தில் வைத்தார்.

அந்தக் கட்டுமானப் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஏறக்குறைய ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது வருவார். பத்து – பன்னிரண்டு முறை வந்து நேரடியாக பார்த்தார்.

எனவே இது அவரால் கட்டப்பட்டது மட்டுமல்ல, எப்படி இருக்க வேண்டும்? எந்த நிலையில் இருக்க வேண்டும்? எந்த அமைப்பு இருக்க வேண்டும்? என்று அதையும் பார்வையிட்டு, அதற்குப்பிறகு இதைக் கட்டித் தொழிலாளர்களுக்குரிய மரியாதையை இன்றைக்கு அவர் வழங்கி இருக்கிறார். எனவே அவர் வழிநின்று இன்றைக்கு இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கும் – இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் நானும் அவர் வழிநின்று தொழிலாளர்களைப் போற்றுவோம். தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதி ஏற்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.