நாடும் நடப்பும்

தொற்றை வீழ்த்த ஸ்டாலினின் உறுதி: உருக்கமான வேண்டுகோள்

மதுரை தம்பதிகள் நடுவானில் திருமணம், இது அவசியமா?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. அது உண்மையா? என்று ஆராய்வதை விட்டுவிட்டு திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்வு நரகமாக மாறாது பார்த்து கொள்வது தான் சரியானதாக இருக்கும்! இந்நிலையில் மதுரையில் ஓர் இளம் தம்பதிகள் தங்களது திருமண வரவேற்பை விமானத்தில் பறந்து கொண்டிருக்கையில் நடுவானில் தங்களது சொந்தபந்தங்களுடன் வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த பிரபல மரக்கடை வியாபாரியின் மகன் ராகேஷுக்கும், தொழிலதிபரின் மகள் தீட்சனாவுக்கு கொரோனா ஊரடங்கு என்பதால் ஆடம்பரமின்றி வீட்டிலேயே மிகச் சிலரே பங்கேற்ற நிகழ்வில் தாலி கட்டித் திருமணம் செய்தார்.

புதுமண தம்பதிகள் இருவரும் பெங்களூரில் ஐடி துறையில் பணியாற்றி வருவதால் கைநிறைய சம்பாதித்தும் வருகிறார்கள். மணமகள் தீட்சனாவின் அப்பாவும் மதுரையில் முன்னணி தொழிலதிபர் ஆவார்.

திருமணத்தை ஊரே ஆச்சரியப்படும்படி ஆடம்பரமாக நடத்த ஆசையுடன் இருந்த இரு குடும்பத்தாருக்கும் இப்படி எளிய முறையில் திருமண நிகழ்வை நடத்தியது வருத்தமாகவே இருந்ததால் இரு வீட்டாரும் கலந்தாலோசித்து வரவேற்பை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர்.

மணமக்கள் தந்த யோசனைபடி விமானத்தை வாடகைக்குப் பிடித்து குடும்பத்தாரையும் நெருங்கிய நண்பர்களையும் உடன் அழைத்துக் கொண்டு விமானத்தில் பறந்தபடி நடுவானில் திருமண வரவேற்பு என்று முடிவு செய்தனர்.

மதுரையில் வாடகைக்கு ஓரு தனியார் விமானத்தை பேசி மொத்தம் 161 பேரை விசேஷமாக அழைத்துக் கொண்டு ஞாயிறு காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மார்க்கமாக பறக்க நல்ல நேரம் 8.30 மணிக்குள் மீண்டும் குடும்பத்தார் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்டு அனைவரின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர்.

தூத்துக்குடியில் இறங்கிய விமானம் உடனே புறப்பட்டு மதுரைக்கு 9 மணிக்கே திரும்பி வந்து விட்டது. கீழே இறங்கும் முன் விமானிகளும் பணிப்பெண்களும் தங்களது வாழ்த்துக்களை கூறிவிட்டு பயணத்திற்கு கட்டணமாக ரூ.7 லட்சம் தந்தற்கு நன்றியையும் கூறி விடை கொடுத்து அனுப்பி விட்டனர்.

முன்பெல்லாம் குதிரை இழுத்த சாரட் வண்டியில் மணமக்கள் பவனி வருவது ஞாபகம் இருக்கும்! சிலர் யானையை அழைத்து வந்து மணமகனை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் கடந்த ஆண்டு ஒரு தம்பதி சென்னைக்கு அருகாமையில் மூழ்கி கடலுக்கு அடியில் நீந்தியபடி மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இப்படி மூழ்கியும் ஆகாயத்தில் பறந்தபடியும் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதிகள் அன்றாட வாழ்வில் குடும்ப சச்சரவுகளை தாங்கும் மனவலிமையுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.

இது கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ள நேரத்தில் இப்படி 161 பேர் குழுவாக ஒரே விமானத்தில் பறந்து 3 மணி நேரமும் சமூக விலகலை கடைபிடிக்காமல் உல்லாசமாக இருந்ததை பார்க்கும்போது அச்சமாகத்தான் இருக்கிறது.

கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு துவங்குவதால் முழு நாளும் கடைகள் திறக்கப்பட்டு இருந்ததால் எல்லா கடைகளிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திங்கட்கிழமையும் திருமண நாட்கள் என்பதால் பல திருமண மண்டபங்களில் கூட்டம் இருந்தது.

பல சிறுவர்கள், இளைஞர்கள், மூத்தவர்களும் கூட முகக்கவசத்தை வாய்வரை மட்டுமே படு ஸ்டைலாக அணிந்து புகைப்படங்களுக்கு காட்சி தந்தனர்.

உணவு சாப்பிட்டனர், பழரசம், காப்பி குடித்தனர். இவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் இப்படிப்பட்ட வைபவங்கள் நடத்த தயாராகும் குடும்பத்தாருக்கு அறிவுரை தரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் நல்லதொரு ஆலோசனையை மிக உருக்கமாகவே தந்தும் இருக்கிறார்.

கொரோனா தானாகப் பரவுவது அல்ல. மனிதர்கள் மூலமாகத் தான் பரவுகிறது. அத்தகைய மனிதர்களாக உங்களில் யாரும் இருக்கக்கூடாது. கொரோனாவை யாருக்கும் கொடுக்கமாட்டேன், கொரோனாவை யாரிடமும் இருந்து பெறவும் மாட்டேன் என்று பொதுமக்களாகிய நீங்கள் எல்லோருமே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கக் காரணம் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுடைய எண்ணிக்கை பீதியூட்டக் கூடியதாக இருக்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உண்மைதான். அதனால் தான் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டிருக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ, டேக்ஸி உரிமையாளர்களுக்கும் சில அறிவிப்புக்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கை மட்டும் முழுமையாக மக்கள் எல்லோருமே பின்பற்றினால் கொரோனா பரவல் என்பது உறுதியாகக் கட்டுக்குள் வந்து விடும். பரவுவதற்கான சங்கிலியை உடைத்துவிட்டால் அதை முற்றிலுமாக ஒழித்துவிடலாம். எனவேதான் நாட்டு மக்கள் எல்லோரையும் கெஞ்சிக் கேட்கிறேன் என்று மிக உருக்கமாக முதலமைச்சராக என்று மட்டுமின்றி உங்களின் சகோதரனாகவும் உங்களில் ஒருவனாகவும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *