நாடும் நடப்பும்

தொற்றை சமாளிக்க அவசரகால அணுகுமுறைகள்

பிரிக்சிட் – அதாவது பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியது சரியா? தவறா? என்ற சர்ச்சை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை! ஆனால் வெளியேறிய பிறகு பல அவசர நடவடிக்கைகளை பிரிட்டன் தங்கள் மக்களுக்காக எடுக்க முடிந்தது.

குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு வழங்க லண்டனில் தலைவர்கள் உடனடியாக முடிவு எடுக்க முடிந்ததற்கான காரணமே அவர்கள் ஐரோப்பிய யூனியனின் சட்ட திட்டங்களில் இருந்து வெளியேறி விட்டதால் தான்.

ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டப்படி எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

அவசர கால அடிப்படையில் குறிப்பாக கொரோனா நோய் பரவல் தடுப்பு போன்ற அதிமுக்கிய முடிவுகளை கூட ஜெர்மனி, பிரான்சு, லக்சம்பர்க் போன்ற வசதியான பொருளாதார நாடுகளால் தன்னிச்சையாக எடுக்க முடியாது திணறுகிறார்கள்.

இதுவரை தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் அதாவது விலை நிர்ணயம், அதன் பின்விளைவுகள் பற்றிய ஆய்வுகள் கொண்டு யார் யாருக்கு போடுவது? போன்ற முடிவுகளை ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம் முழுமையாக எடுக்காததால் தாமதமாகிவிட்டது.

மேலும் பல்வேறு புதுப்புது தடுப்பு மருந்துகள் பற்றிய ஆய்வுகளை பெற்ற வண்ணம் இருக்கும் அப்பாராளுமன்றம், இதுவரை அரைகுறை ஒப்புதல் தந்துள்ள கோவிசீல்ட், ஜான்சன் முதலிய தடுப்பூசிகளை தொடர வேண்டாம் என்று கூறியும் விட்டனர்.

ஆனால் இங்கிலாந்தில் தற்போது கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் தடுப்பூசியை போட்டுக் கொண்டு விட்டனராம். ஆனால் ஐரோப்பிய யூனியனிலோ 25 சதவீதம் பேர் கூட தடுப்பூசியை பெற்றதாக தெரியவில்லை.

ஐரோப்பிய யூனியனின் சட்ட திட்டப்படி அதன் அங்கத்து நாடு தனிப்பட்ட முறையில் சுயேச்சையாக முடிவு எடுத்து அப்படி தடுப்பூசியை ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாது.

அதாவது பின்தங்கிய நாடு, ஏழை நாடு, பணக்கார பொருளாதாரம் என எல்லா தரப்பு நாடுகளுக்கும் ஒரே விலை, ஒரே நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வினியோகிக்கப்பட வேண்டும்.

ஆனால் இங்கிலாந்து வெளியேறி விட்டதால் தங்களுக்கு வேண்டிய முடிவை உடனுக்குடன் எடுத்து விட்டது!

இதே பிரச்சினை நம் நாட்டிலும் சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் உண்டு. வடக்குப் பகுதிகளில் தேவைப் படுவது தென்னகத்துக்கு உதவாது! ஆனால் தேசியமய சட்ட திட்டங்களால் ஏதேனும் ஒரு பகுதிக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

அதைத் தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:–

அடுத்த 6 மாதங்களில் தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி தரப்பட்டு உள்ள நிறுவனங்கள், விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவசர காலத்தில் விநியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர்கள், பஸ் மற்றும் மூன்று சக்கர மற்றும் டாக்சி டிரைவர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாநில அரசுகள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போட அனுமதி வழங்கலாம்.

சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்க தேவையான நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

இப்படி மன்மோகன்சிங் கூறியிருக்கும் பல்வேறு கருத்துக்கள் மோடியின் பார்வைக்கு சென்றிருப்பது அரசியல் பாகுபாடின்றி பரிசீலனை செய்யப்பட வேண்டிய நல்ல யோசனையாகும்.

ஐரோப்பிய யூனியன் போல் தாமதிக்காமல் மக்கள் நலன் மீது அக்கறையுடன் அவற்றை பிரதமர் மோடி அமல்படுத்துவது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *