செய்திகள்

தொற்றை கட்டுப்படுத்தும் ஆலோசனை குழுவிலிருந்து மூத்த விஞ்ஞானி ஷஜீத் ஜமால் திடீர் விலகல்

புதுடெல்லி, மே 17–

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து மூத்த விஞ்ஞானி ஷஜீத் ஜமால் திடீரென விலகியுள்ளார். தன்னுடைய விலகல் குறித்து எந்தவிதமான காரணத்தையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், வைரசின் மாறுபாடுகளை கண்டறிதல் மற்றும் வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இன்சகோக் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழுவின் மூத்த அறிவியல் விஞ்ஞானியாக வைரஸ் தொடர்பான ஆராய்சியில் பிரபலமான வைராலஜி நிபுணர் ஷஜீத் ஜமால் செயல்பட்டு வந்தார்.

விமர்சனம்

இதற்கிடையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சரிவர செயல்படவில்லை என்று ஷஜீத் ஜமால் விமர்சனம் செய்தார். இது தொடர்பாக, பிரபல வெளிநாட்டு செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் எழுதிய கட்டுரையில், கொள்கை ரீதியிலான முடிவுகள் எடுப்பதில் ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்ததாக’ மத்திய அரசை விமர்சித்து எழுதியிருந்தார். மத்திய அரசின் கொரோனா கையாளும் முறை, குறைந்த அளவிலான பரிசோதனைகள், தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவை குறித்தும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி செல்லும் போது இருக்கும் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுகளை எடுப்பது மற்றொரு தவறு என தெரிவித்திருந்தார். மேலும், கடந்த 3-ம் தேதி ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கொரோனாவின் புதிய வகை தொற்று தொடர்பாக மார்ச் மாத தொடக்கத்திலேயே மத்திய அரசில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு விஞ்ஞானிகள் குழுவான இன்சகோக் எச்சரிக்கை விடுத்தது.

அந்த மூத்த அதிகாரிகள் பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டது என்று அந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு விஞ்ஞானி கூறியுள்ளார் என்று செய்தி வெளியானது.

கொரோனா வேகமாக பரவலாம் என்று எச்சரிக்கை விடுத்தபோதும் அந்த பரவலை தடுக்க மிகப்பெரிய அளவில் எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்க மத்திய அரசு முன்வரவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் முகக்கவசம் அணியாமல் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கானோர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது வைரஸ் பரவலை அதிகரிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானி ஷஜீத் ஜமால் குழுவில் இடம்பெற்றிருந்த விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

ராஜினாமா

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் மற்றும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை கண்டறிதல் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து மூத்த அறிவியல் விஞ்ஞானியான வைராலஜி நிபுணர் ஷஜீத் ஜமால் நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *