சிறுகதை

தொற்றுக்கு முற்று |கவிமுகில் சுரேஷ்

“இயற்கையை காப்போம் இனிதாய் வாழ்வோம்” எனும் இயக்கத்தை ஆரம்பித்து ஊரெங்கும் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தி வந்தால் சமூக சேவகியான தர்ஷினி.

தர்ஷினியின் கருத்து ராஜேஷின் மனசை ஆழமாகத் தொட்டது.

ராஜேஷ் அவளுடன் தொடர்ந்து பேசினான் “கொரோனா தொற்றுக்கு நாமதான் காரணமா”

” ஆமா அதிலென்ன சந்தேகம்”

” எப்படி சொல்றீங்க”

” சுற்றுச்சூழல் மீது சமீப காலங்களில் மனிதர்கள் நிகழ்த்திவரும் மிக மூர்க்கமான தாக்குதல்களின் விளைவுதான் இது”

அவன் ஆச்சரியத்தோடு “அப்படியா”என்றான் ஆவளோடு செவிமடுத்தான்.

“ஆமா கொரோனா நாம் சந்திக்கும் கடைசி தொற்று அல்ல வனவிலங்குகளின் நலனையும், பருவநிலை மாற்றங்களையும் சரிசெய்யாமல் மனித ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த நினைத்தால் அதனால் எந்தப் பயனும் அடைய இயலாது”

மேலும் மேலும் தர்ஷினியின் வார்த்தையை கேட்க ஆவலாய் இருந்தான் ராஜேஷ்.

அவள் தொடர்ந்தாள் “இன்றைக்கு மனிதன் சுயநலம் உடையவனாய் விலங்கினம், பறவை இனங்களை அழித்து, இயற்கை தாது வளம் மிக்க மரபுசார்ந்த மண்ணை நாசமாக்கிவிட்டான், நீர்ப்பரப்பை சார்ந்த நிலத்தை எல்லாம் பண ஆசை கொண்டு பிளாட் போட்டு வீடு கட்ட விற்றுக் கொண்டிருக்கிறான், காட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது”

அவள் சொல்லி முடிக்கும் முன்னே ராஜேஷ் “இதன் மூலமா நீங்க என்ன சொல்ல வரீங்க” என்றான்.

பொறுமையா கேளுங்க ராஜேஷ் சொல்றேன் “இந்த அழிவுகள் தான் நோய் தொற்றுக்கான காரணங்கள்”என்றாள்.

“அப்படினா நீ சொல்றபடி இயற்கையின் சமநிலை மாறுபடும் பொழுது மனிதர்களுக்கு இப்படிப்பட்ட நிலை உண்டாகுமா?”

“ஆம் காடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கிறது கொரோனா போல எட்டு லட்சத்திற்கும் மேலான கிருமிகள் வனவிலங்குகளிடம் உண்டு”

“கொரோனாவுக்கே தாங்க முடியல இன்னும் எட்டு லட்சத்திற்கும் மேலான கிருமிகள்னு சொல்லி பயமுறுத்துறீங்க”

“பயந்து தான் ஆகணும் வேற வழி இல்ல நம்மள காப்பாத்திகணும்னா நாம வனத்தை அழிக்கக்கூடாது வனவிலங்குகளை அழிக்கக்கூடாது அவைகளின் வாழ்வாதாரமான வனத்தை காப்பாற்றப்பட வேண்டும்”

“நம்ம என்ன சொன்னாலும் யாரு கேக்க போறாங்க”

“அதுக்காக சொல்லாம இருக்க முடியுமா நம்ம அடுத்த சந்ததி பாதிக்குமே அடுத்த சந்ததிக்கு நாம சாபத்தையும், பாவத்தையும்தான் சம்பாதிச்சு வச்சுட்டு போறோம் வாழ்ற கொஞ்ச நாட்களில் நாம ஏதாவது பரிகாரம் செஞ்சுட்டுப் போகணும் அதுதான் நம்ம வாழ்ந்த வாழ்க்கைக்கு இந்த பூமியில் ஓர் அர்த்தம் இருக்கும் “

“ஆமா நீ சொல்றது சரிதான் வெந்தத சாப்பிட்டு விதி வந்தா சாவோம் அப்படின்னு இல்லாம பிறருக்காகவும் நாம் ஏதாவது செஞ்சுட்டு போகணும் அதுதான் சரி”

மேலும் அவன் அறிந்து கொள்ளும் நிலையை அறிந்து தர்ஷினி தன் பேச்சை தொடர்ந்தாள்

“1998ல் மலேசியா காட்டில் ஒரு பெரிய பன்னிப் பண்ணையில் நூற்றுக்கணக்கான பன்றிகள் மர்ம நோயில் மரித்தது. அந்த நியூஸ் கூட நீ படிச்சிருப்ப… ஞாபகப்படுத்த விரும்புறேன்”

“எல்லாம் மறந்து போச்சு”

“சரி சொல்றேன் கேளு “

“அந்தப் பன்றிப் பண்ணையில் வேலை செய்த தொழிலாளர்களும் நோயால் பாதிக்கப்பட்டார்கள் அந்நோய் உலகம் முழுவதும் பரவி பயமுறுத்தியது அதற்குப் பெயர்தான் நிபா வைரஸ் என்பதாகும்”

“அப்படியா அது எப்படி அங்கிருந்து உலகம் முழுவதும் பரவுச்சி”

“அது ஒன்னும் இல்ல அந்த பண்ணையில ராத்திரியானா அங்கு சுற்றிப் பறக்கும் ஆந்தைகள் கொறித்த பழங்ளை பன்றிகள் சாப்பிடுவதினால் இந்த நோய் உண்டாகி பரவிற்று “

“நீ சொல்றதெல்லாம் கேட்க பயமா இருக்கு”

“எதுக்கும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை இறைவன் படைத்த இந்த இயற்கை பூமியை நாம் சரியாக பண்படுத்தி பாதுகாத்தால் போதுமானது”என்றாள்

“ஆமா இயற்கைக்கு முரணாக நாம் செயல்படுவதால் தான் நம் வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருக்கிறது”

“சரியா புரிஞ்சுகிட்டே நல்லது” எனக் கூறி மனம் மகிழ்ந்தாள்

“இனி நானும் உன்னோடு சேர்ந்து இயற்கையைப் பேணிக்காக்கும் மக்கள் நல பணியில் ஈடுபட விரும்புகிறேன்” என்றான்.

“வரவேற்கிறேன்” என்றாள்.

இந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியின் மூலம் பார்த்துக்கொண்டிருந்த ஆட்டுக்காரன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இனி நாமும் தேசத்தைக் காக்க ஒன்றுபட்டு இக்கருத்தை உடையவர்களாய் செயல்படுவோம் எனும் உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *