எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அறிமுகம்
சென்னை, பிப்.15-–
பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் கை கடிகாரத்தை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், வடிவமைத்துள்ளனர். இதற்கான வெளியீட்டு விழா ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் தலைவர் ஏ.சி.எஸ். அருண்குமார் தலைமை தாங்கினார். வேந்தர் ஏ.சி.சண்முகம், இந்த கை கடிகாரத்தை அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த கை கடிகாரத்தை அணிந்திருப்பவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் யார் தொட்டாலும் ‘ஷாக்’ அடிக்கும். சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மையத்தில் இந்த கை கடிகாரம் உயர் மின்னழுத்த மற்றும் நம்பகத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் குழுவினர் இந்த கடிகாரத்தின் நம்பகத்தன்மையையும், பயன்படுத்துவோரின் பாதுகாப்பினையும் கள ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்தனர்.
இந்த கை கடிகாரம் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய விஞ்ஞானி ராம்கிஷோருக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில், போலீஸ் துணை கமிஷனர் ஜி.வனிதா சிறப்பு விருந்தினராகவும், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் சி.ஆர்.ஜீவன் தாஸ், மோகன்ராம் சந்திரசேகர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, பதிவாளர் சி.பி.பழனிவேலு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எ.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![]()





