செய்திகள்

தொடர் விபத்துக்களைத் தடுத்து உயிர்களைக் காக்க நடவடிக்கை: கலெக்டர் சுப்பிரமணியன் தகவல்

விழுப்புரம், செப்.12-

விழுப்புரம் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட கல்வி நிறுவன ஓட்டுனர்களுக்கான இலவச கண் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாமினை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமினை தொடங்கி வைத்து, கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:–

குறிப்பாக கல்வி நிறுவன ஓட்டுனர் களுக்குகென இம்முகாம் நடத்துவதற்கான நோக்கம் பள்ளி மாணவ மாணவியர்கள் பயணம் செய்யும் வாகனங்களின் ஓட்டுனர்கள் பார்வைக்குறைபாடு இன்றியும், உடல் நலத்துடனும் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இம்முகாமில் பார்வைக்குறைபாடோ அல்லது உடல்நலக் குறைபாடோ ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அவை சரிசெய்யப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் வாகன விபத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. அதற்கு போக்குவரத்துக் காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை ஆகிய துறைகளின் ஒத்துழைப்பே மிக முக்கிய காரணமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2016–ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 916 பேர் உயிரிழந்தனர். இது 2017–ல் 834-ஆக குறைந்தது. இந்த ஆண்டு 6 மாதங்களில் 272-ஆய குறைந்துள்ளது. இதற்கு காரணமான வட்டாரப் போக்குவரத்து, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட துறையினருக்கு பாராட்டுக்கள்.

இலவச கண் கண்ணாடி

விழுப்புரம் மாவட்டத்தை முழுவதுமாக விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க ஓட்டுனர்களாகிய நீங்கள் முழு உடல் நலத்துடன் வாகனம் ஓட்டுவது முக்கியமானதாகும். பள்ளி வாகன ஓட்டுனர்களாகிய உங்களுக்கு கண் குறைபாடு இருந்தால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இலவசமாக கண் கண்ணாடி வழங் கப்படும். நேற்று விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலமாக விழுப்புரத்தில் இம்முகாம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக அந்தந்த இடங்களில் இம்முகாம் நடத்தப்படும். இம்முகாமினை அனைத்து கல்வி நிறுவன ஓட்டுனர்களும் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் உடல் நலனை காத்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இம்முகாமில், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் சுந்தர்ராஜன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) விழுப்புரம் டாக்டர்.பாலுசாமி, கள்ளக்குறிச்சி டாக்டர்.ஜெமினி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் நாசர், முதல் உதவி பயிற்சியாளர் விவேகானந்தன், விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவக்குமார், கவிதா, பிரான்சிஸ் மற்றும் விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *