செய்திகள்

தொடர் கனமழையால் வெள்ளத்தில் கேரளா; 27 பேர் பலி

திருவனந்தபுரம், அக்.18–

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. கேரளாவில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளாவில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்றதால் மாநிலம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தெற்கே திருவனந்தபுரம் தொடங்கி வடக்கே காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்துவருகிறது. இடைவிடாது பெய்தமழையால் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

திருவனந்தபுரம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை அடித்து கொட்டுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கனமழையால் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் ஓடுவதால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கேரளாவில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து, அங்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர் வரத்து அதிகரிப்பாலும் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பலத்த மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிங்கால் மற்றும் இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 27 ஆக உயர்ந்துள்ளது.

சபரிமலை பக்தர்களுக்கு

அனுமதி மறுப்பு

கேரளாவில் கனமழை பெய்வதால், தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களையும், ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களையும் கம்பமெட்டு, குமுளி பகுதியில் தேனி மாவட்ட போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். எர்ணாகுளம் செல்லும் கனரக வாகனங்களையும் அனுமதிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *