ஆர்.முத்துக்குமார்
கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்தியா எடுத்த உடனடி நடவடிக்கைகள், சாமானியனுக்கு தரப்பட்ட நிதி உதவிகள், பிறகு தடுப்பூசியை உருவாக்கிய வேகம், வல்லமை என பல தரப்பு வெற்றிகளை உருவாக்கிய பிரதமர் மோடியை உலக தலைவர்கள் புதிய கோணத்தில் பார்த்து பாராட்டியது.
மேலும் தடுப்பூசியை உருவாக்கிய சில நாட்களில் அமெரிக்காவையும் பிரிட்டனையும் போல் அதிவேகமாக நல்ல விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து பணக்கார நாடாக உயர துடிக்காமல் தன் நாட்டு மக்களுக்கு மிக குறைந்த விலையில் தர வைத்து புரட்சியை செய்ததுடன், பல உலக நாடுகளுக்கு இலவசமாகவும் மிக குறைந்த விலைக்கு அனுப்பி வைத்த போது சர்வதேச தலைவர்களின் முழு நம்பிக்கையையும் பாராட்டுகளையும் பெற்று அன்று முதல் உலகின் முன்னணி தலைவர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்.
இந்த கவுரவம் அவருக்கு விரைவில் இதுவரை இந்தியர் எவரும் பெறாத கவுரவத்தை பெற்று தர இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’, உலக தலைவர்களின் தலைமை குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
இதன்படி அமெரிக்கா உட்பட 22 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடிமுதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 76% பேர் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர். 18% பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு அடுத்து சுவிட்சர்லாந்து அதிபர் ஆலன் பெர்செட் 64% வாக்குகளுடன் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் மானுவேல் லோபஸ் ஒபரடோர் 61% வாக்குகளுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா 49%, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 48%, இத்தாலி பிரதமர் மெலோனி 42%சதவீத வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40% வாக்குகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் 39%, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் 38%, கனடா பிரதமர் ஜஸ்டின், பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் 37%, போலந்து பிரதமர் மேத்யூஸ் 32%, சுவீடன் பிரதமர் உஃல்ப் கிறிஸ்டர்சன் 32%, நார்வே பிரதமர் ஜோனாஸ் 27%, இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 27%, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகமர் 27%, ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் 25%, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ 25%, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 24% வாக்குகளை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கடந்த 2020–-ம் ஆண்டு முதல் உலகத் தலைவர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து புதிய சாதனை படைத்திருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்த சாதனை நமது நாட்டிற்கு பெருமை என்பதால் இதை கொண்டாடும் விதமாக நாம் ஒவ்வொருவரும் சட்டங்களை மதித்து நடைபோட்டால் உலக அரங்கில் நிலையான உச்ச இடத்தில் நிரந்தரமாய் குடியிருக்க முடியும்!
––––––––––––