ஆர். முத்துக்குமார்
கடந்த வார இறுதியில் நாடே பெருமைப்படும்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் பிஎஸ்எல்வி C–54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பாராட்டுக்களை பெற்று விட்டனர். இதில் நேபாளம், இலங்கை, பூடான் உள்ளிட்ட 61 நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ‘இஸ்ரோ’ அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக பூடானின் தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அதிமுக்கிய துறைகளில் பங்காற்ற ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள்களையும் வெளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், காணொலி வாயிலாக பேசும்போது, ‘‘ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள். 2019–-ல் பூடான் பயணத்தின்போது, அந்த நாட்டில் இஸ்ரோ உதவியுடன் அமைக்கப்பட்ட செயற்கைக்கோள் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த மையம் பூடானின் தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகிறது’’ என்றார். இந்த நிகழ்வில், பூடான் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கர்மா டன்னேன் வாங்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முறை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் இஓஎஸ்–-06 உள்ளிட்ட 9 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் தொலையுணர்வு வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன்படி, கடல் ஆய்வுப் பணிகளுக்காக 1999, 2009-ல் ஓஷன்சாட்-1, ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஓஷன்சாட்–-1 செயற்கைக்கோளின் ஆய்வுக்காலம் 2011–-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. ஓஷன்சாட்-2 செயற்கைக் கோளில் சில கருவிகள் பழுதானதால், அதிலிருந்து தகவல்களைப் பெற முடியாத நிலை உள்ளது.
எனவே புவி கண்காணிப்பு, கடலாய்வு செயல்பாடுகளுக்காக, அதிநவீன ஓஷன்சாட்-3 (இஓஎஸ்-06) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது.இஸ்ரோலின் அடுத்த சாதனை என்னவாக இருக்கப்போகிறது, இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் குறிப்பிட்டது.
சூரியனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அங்கு குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் பாதுகாப்பு சுவர்கள் அமைப்பதற்கான கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.
இந்த நூற்றாண்டில் முதல் 22 ஆண்டுகள் நிறைவுக்கு வந்துவிட்ட இந்நேரத்தில் நமது வெற்றிகளை பற்றி திரும்பிப் பார்க்கையில் விண்வெளி சாதனைகள் பிரமிப்பையும், வியப்பையும் தரத்தான் செய்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நடத்தி காட்ட இருக்கும் புரட்சிகள் நம்மை வரலாற்று பக்கங்களில் உன்னதமான நிலையில் அமரத்தான் போகிறது.