ஆர்.முத்துக்குமார்
புயல் அடித்து ஓய்ந்து விட்டாலும் தூவானம் தொடர்வது போல் தேர்தல் நாள் ஏப்ரல் 19 அன்றே தமிழகத்தில் முடிந்துவிட்டாலும் தேர்தல் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது தொடர்கிறது.
குறிப்பாக வியாபாரிகள் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்வதில் சிக்கல் தொடரத்தான் செய்கிறது. ஏன் ஒருவர் அதிகத் தொகையை ரொக்கமாக கையாளுகிறார் என்றால் அவரது தொழிலில் அப்படி ஒரு நிலை ஏற்படக் காரணம் மத்திய மாநில வரிச்சுமை தான்!
பெரிய நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகத்தை சிங்கப்பூருக்கு மாற்றிக் கொண்டு குறைந்த வருமான வரியான 8 சதவீதத்தை கட்டி அங்கு ஆரம்பித்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் துபாய் மற்றும் அருகாமை நாடுகளில் வருவாய் வரியே கிடையாது!
இதெல்லாம் பார்க்கும்போது அச்சிறுநாடுகள் எப்படி பணக்கார நாடுகளாக ஜொலிக்க முடிகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
நம் நாட்டில் அந்த சாத்தியக்கூறு கிடையாது. தனிநபர் வரி முதல், சேவை வரிகள் வரை அதிகமாக இருப்பதால் தான் பல பரிவர்த்தனைகள் ரொக்கமாக நடத்தப்பட்டு வருகிறது.
அதாவது அரசுக்கு வரி ஏதும் செலுத்த வழியே இல்லை என்பதை நம்மில் பலர் விரும்புகிறார்கள்.
ஆக தேர்தல் நேரத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் எல்லா நாட்களிலும் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.
இப்படி அன்றாடம் நடமாடும் ரொக்கப்பணம் பிரதானமாக அரசியல்வாதிகளின் கையில் தான் அதிகமாக புரளுகிறது.
அதனால்தான் தேர்தல் நடத்தி விதிமுறை அமுலுக்கு வந்த நாள் முதலாய் பறக்கும் படை செயல்பட வந்து விடுகிறது.
நகரில் மட்டுமின்றி பின்தங்கிய கிராமங்கள் வரை ரொக்கப்பண நடமாட்டம் அதிகமாகவே இருப்பதை மறுக்க முடியாது!
ஆக நமது பொருளாதாரத்தில் அங்கமாகி விட்ட ரொக்கப்பண நடமாட்டத்தை தேர்தல் நேரத்தில் அதிகரித்து விடுவதால் அதைத் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது நிலை உருவாகிவிட்டது.
தேர்தல் நேரத்தில் திடீர் சோதனைகள் நடத்தப்படுவது போல் எல்லா நாட்களிலும் பல்வேறு பகுதிகளில் ரொக்கப்பண நடமாட்டத்தை தடுக்க தீவிரம் காட்ட மத்திய மாநில அரசுகள் தயங்குகிறது.
பொதுவான தேர்தல் நடத்தை விதிகள் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் மானவை. ஆனால் ரொக்கம் எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடு பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினர் எனப் பல்வேறு தரப்பினரையும் பாதிக்கக்கூடியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரிக்கும் முதல் கட்டத்திலேயே தேர்தல் முடிந்து விட்டதால் அந்தக்கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இச்சூழலில் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் பறக்கும் படை நிலையான கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட இருப்பதாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹி அறிவித்திருக்கிறார். அதே நேரம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தில் தேர்தல் முடியும் வரை எல்லையோர மாவட்டங்களில் ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ரூ.50 ஆயிரம் என்கிற உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இது பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் நிறுவனத்தினரைப் பாதிப்பதாக அவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமையும். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்ற அரசியல் தலைவர்கள் இதை விமர்சித்துள்ளனர்.
புதிதாக அமைய இருக்கும் மத்திய அரசு ஜனத்தொகை கணக்கெடுப்பிற்கு உத்தரவிட்டு நாடு தழுவிய அப்பணிக்கு உந்துதல் தரவேண்டும்.
மேலும் தனிநபர் வருவாய் எப்படி இருக்கிறது என்று உற்றுப் பார்த்தால் மிகமிக குறைவு. ஆகவே தான் ரொக்கப்பண நடமாட்டமும் உச்சத்தில் இருக்கிறது.