சிறீநகர், ஜூலை 9–
3 வது நாளாக தொடரும் கனமழையால் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை மைய அறிவிப்பில் கூறியதாவது:–
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்கள் கனமழையால் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதால் இந்த 2 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்துக்கு கவனமாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்து 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழையைக் கொடுக்கும்போது விடுக்கப்படுவது சிவப்பு எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. கதுவா, சம்பா மாவட்டங்களை தவிர்த்து ரம்பன், தோடா, உதாம்பூர் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.