போஸ்டர் செய்தி

தைப்பூச ஜோதி ஏற்றினார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை

Spread the love

மேல்மருவத்தூர், பிப்.9–
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற தைப்பூச பெருவிழாவில் பங்காரு அடிகளார் முன்னிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று தைப்பூச ஜோதியை ஏற்றி வைத்தார்.இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல ஊர்களிலிருந்தும் மற்றும் வௌிநாடுகளிலிருந்தும் வந்திருந்து கலந்து கொண்டனர்.
தைப்பூச விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி முதல் தைப்பூச சக்தி மாலை அணிந்து சக்திவிரதம் இருந்து இருமுடி எடுத்து வந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
இருமுடிவிழாவில் 50 நாட்களுக்கும் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் 50 லட்சம் பக்தர்களுக்கு மேல் உணவருந்தினர்.
நேற்று முன்தினம் மாலை லட்சுமி பங்காரு அடிகளார் கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற அன்ன தானத்தை ஆன்மிக இயக்க துணைத் தலைவர் தேவி ரமேஷ் தொடங்கி வைத்தார். இந்த பூஜையையொட்டி சித்தர் பீடத்துக்கு வந்த பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.
நேற்று காலை தைப்பூச விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் குரு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் இல்லம் முன்பு நடைபெற்றது. ஜோதியை லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றிவைக்க, 5 பெண்கள் எடுத்துவந்தனர். ஜோதி ஊர்வலத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் கோ.ப. அன்பழகன், கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்ந ஊர்வலத்தில் நாதஸ்வர இசையும், தொடர்ந்து தேவர் ஆட்டம், நடனமாடும் குதிரை, ஒயிலாட்டம், பேண்டு வாத்தியங்கள், கிராமியக்கலை, பொய்க்கால் குதிரை, நைய்யாண்டி மேளம் இவற்றுடன் பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள் அந்தந்தநாடுகளின் பெயர் எழுதப்பட்ட பதாகைகளுடன் தொடர, கேரள செண்டை வாத்தியம் முழங்க, மகளிர் சீர்வரிசைகளுடன் குரு ஐோதி ஊர்வலம் ஐோதித்திடலை அடைந்தது.
ஐோதி ஏற்றப்படும் செப்புக் கொப்பரைக் கலசம் இயற்கை முறையில் விளைப் பொருட்களால் சிறப்புற அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக ஐோதி மேடையின் மத்தியில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே ஐோதி கலசத்தின் முன்புறம் குரு ஐோதி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆதிபராசக்தி பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, பங்காரு அடிகளார் முன்னிலையில் தைப்பூச ஜோதியை ஏற்றினார். முன்னதாக அவருக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. சித்தர்பீடம் வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிப்பட்டார்.
இதில் கவர்னரின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி, அரசு திட்டங்களின் இயக்குநர் ராதாகிருஷ்ணன், ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜோதி பிரசாத விநியோகத்தை ஆன்மிக இயக்கத்தின் அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ் துவக்கி வைத்தார். விழா ஏற்பாட்டினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், இயக்கத்தின் ஈரோடு மாவட்டத்தின் மன்றங்களும், சக்தி பீடங்களும் சிறப்பாக செய்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *