சிறுகதை

தேவநாதன் என்ற கிறுக்கன் – ராஜா செல்லமுத்து

சென்னை நகரம் முழுவதும் மெட்ரோ ரயில் போடும் திட்டத்திற்காக ஆங்காங்கே அடைப்புகளும் பெரிய பெரிய எந்திரங்கள் வேலை செய்வதும் இருவழிச் சாலை ஒரு வழிச்சாலையாவதும் ஒரு வழிச்சாலை மாற்று வழியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதும் சென்னை வாழ் மக்களுக்கு பெரும் துயராக இருந்தது.

Inconvenience today.better tomorrow இன்றைக்கு கஷ்டப்பட்டால் நாளைக்கு சந்தோஷமாக இருக்கலாம் என்ற அடைமொழியை மெட்ரோ ரயில் வேலை செய்யும் ஆட்கள் அந்த வழியாக செல்லும் பயணிகளுக்கு அறிவுறுத்தி எழுதியிருந்தார்கள்.

காலையில் புறப்படும் பேருந்து அதனுடைய வழித்தடத்தில் எப்படி போகிறது என்பது ஓட்டுனருக்கும் தெரியாது. நடத்துனருக்கும் தெரியாது.

தார்ச்சாலை எங்கே இருக்கிறதோ அங்கே சென்று கொண்டிருக்கும். குறிப்பிட்ட இடத்தில் இறங்க வேண்டிய பயணிகள் அங்கே இறங்க முடியாமல் நடத்துனரிடமும் ஓட்டுநரிடமும் சண்டை போட்டுக் கொள்வது தினமும் வாடிக்கையாக்கி கொண்டிருந்தது.

ஐயப்பன் தாங்கலிலிருந்து வந்த 26 தடப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்காமல் மெட்ரோ ரயில் பணிக்காக வேறு பாதையில் செல்ல நேர்ந்த போது, ஒரு சிக்னலில் ஒரு பயணி

வண்டிய நிறுத்து. வண்டிய நிறுத்து என்று அபய குரல் கொடுத்து அந்த பேருந்தின் பின்னாலே ஓடி வந்தார்.

ஏறக்குறைய இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகளை தவிர அந்த பேருந்தில் அதிகமாக கூட்டம் இல்லை .

என்னமோ ஏதோ என்று அந்தப் நபரின் அவ பக் குரலைக் கேட்டு ஓட்டுனர் பேருந்து நிறுத்தினார் .சிவப்பு நிறம் நெற்றியில் திருநீறு குங்குமம். இன்சர்ட் பண்ணிய உடை. கையில் ஒரு கூடை என்று பேருந்தில் ஏறிய அந்த நபர்

என்ன ஆழ்வார் திருநகர்ல நிக்காம நீ பேசாம போயிட்டு இருக்குற?. உன் பேர் என்ன? டிரைவர் பெயர் என்ன? என்று பெரிய குரல் எடுத்துப் பேசினார் அந்தப் பயணி.

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அந்த பெரியவர் மீது எரிச்சல் வந்தது.

பஸ்ஸ நிறுத்துனது தப்பு. அத விட பஸ்ல ஏறி இவ்வளவு சத்தமா பேசுறது இரண்டாவது தப்பு. இந்தாளுக்கு லூசா என்ன? என்று பேசாத பயணிகள் இல்லை.

நடத்துனரிடம் அதிக சத்தத்தில் பேசிய அந்த நபர் ஓட்டுனரிடம் போய் உட்கார்ந்து கொண்டு,

தான் தேவநாதன் என்பதை அறிமுகப்படுத்தி தன் பாக்கெட்டில் இருந்து அவருடைய விசிட்டிங் கார்டனு எடுத்து கையில் கொடுத்து பாட ஆரம்பித்தார்.

தேவாரம், திருவாசகம் ,மகாபாரதம் ராமாயணம் இன்று பாடலும் வசனங்களும் சொல்லியபோது தேவநாதன் அருகில் இருந்த ஒரு நபர்

ஐயா டிரைவர் வண்டிய ஓட்டட்டும் நீங்க பாடுற பாட்டுல அவர் உங்களைப் பார்த்துட்டு வண்டி எங்கேயாவது கொண்டு பள்ளத்தில் விட்ட போறாரு கொஞ்சம் அமைதியா இருங்க என்று சொன்னபோது

என்ன சார் ஏன் அமைதியா இருக்கணும். சந்தோஷமா வாங்க என்னத்துக்காக இப்படி இருக்கணும்? என்று உடன் பயணித்த பயணியுடன் சண்டை போட்டார் தேவநாதன்

அவரின் பேச்சும் அவரின் நடவடிக்கையும் அந்தப் பேருந்தில் இருந்தவர்களுக்கு நகைப்பைத் தந்தது .

எல்லோருடைய கவனமும் தேவநாதன் மீது பட்டது. அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரைப் பற்றியும் வெட்கம் கொள்ளாமல்

“பாென்னார் மேனியனே புலித்தோலை அரக்கசைத்து ” என்ற தேவாரப் பாடலையும் திருவாசகப் பாடலையும் முருகப்பெருமானின் கந்த சஷ்டிகளையும் ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் மடை திறந்த வெள்ளம் என பாடிக்கொண்டும் பேசிக் கொண்டும் வந்தவரை பார்த்தவர்களுக்கு .

இங்கயே இப்படின்னா வீட்ல இவரெல்லாம் வச்சு எப்படி சமாளிக்க போறாங்கன்னு தெரியலையே? என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள் .பார்ப்பதற்கு உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர் போல இருந்தார் தேவநாதன் .

என்ன நினைத்தாரோ தெரியவில்லை; தேவநாதன் அருகில் இருந்த நபர் பட்டனெ எழுந்தார்.

ஏங்க குவாட்டர் போட்டு உட்கார்ந்து இருக்கேன். நீங்க பேசுன பேச்சுல எல்லாமே இறங்கி போச்சு. என்ன பண்றது இப்ப? என்று கேட்க

திருப்பி போய் குவாட்டர் அடிச்சிட்டு வாங்க என்று கிண்டலாகச் சொன்னார் தேவநாதன்.

அவர் ஏறிய இடத்திலிருந்து அவர் இறங்கும் வரை அந்தப் பேருந்து ரொம்பவும் கலகலப்பாகவும் சலசலப்பாகவும் இருந்தது.

சிறிது நேரத்திற்கு எல்லாம் எழுந்த தேவநாதன் தன் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து

என் பேர் தேவநாதன் எல்ஐசி ல வேலை பார்த்தேன் . ரிடையர் ஆகும் பாேது காசு தரல என் அட்ரஸ் இந்த விசிட்டிங் கார்டு வச்சுக்கோங்க. யாருக்காவது பொண்ணு பார்க்கணும் மாப்பிள்ளை பாக்கணும்னா என்ன நீங்க அணுகலாம் என்று இந்தியாவிலிருந்த அத்தனை சாதிப் பெயர்களையும் சொல்லி மணமகள் மணமகன் வரன்களுக்கு இனி நீங்கள் அணுகலாம் என்று தன்னைப் பற்றிய சுய விவரத்தையும் சொல்லி அமர்ந்தார் தேவநாதன். .

அதுவரை அவரை கிறுக்கன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் விவரமான ஆளா தான் இருக்கான் போல அன்று முணுமுணுத்துக் கொண்டார்கள் .

தேவநாதனின் பேச்சில் பாட்டில் லைட்டு போன ஒரு நபர் அவரை அருகில் அழைத்து

ஐயா நீங்க தமிழ் நல்லா பேசுறீங்க எங்க பள்ளிக்கூடத்துக்கு வந்து ஒரு நாள் பேச முடியுமா ?என்று சொன்னபோது

அதுக்கு என்னங்க பேசிடுவோம் ; நான் ஏற்கனவே ஸ்கூல் டீச்சர் இருந்துட்டு தான் வந்தேன். அதுக்கப்புறம் தான் அந்த எல்ஐசி பிஎஸ்என்எல், இந்த வேலையெல்லாம் அடுத்தடுத்து பார்த்தேன் .அதனால நீங்க சொல்லுங்க. எப்ப வேணாலும் வந்து நான் உங்க குழந்தைகளுக்காக தமிழ் பாடம் எடுக்கிறேன் என்று சொன்னார் தேவநாதன்.

தேவநாதன் இப்படி படபடவென்று பாடுவதையும் பேசுவதையும் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார் ஒருவர்.

என்ன, என்னைய படம் பிடிக்கிறிங்களா? ஆனா ஒன்னு அந்த படத்துக்கு கீழே என்னுடைய ஃபோன் நம்பரை போட்டுருங்க அப்பதான் யாராவது பேசுவாங்க நாலு பேருக்கு தெரியணும்; இல்ல நம்ம யாருன்னு என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார்.

அப்படி ஒரு பேசிக் கொண்டிருக்கும் போதே பயணிக்கும் அவர் பயணிக்கும் பேருந்து ஒரு இருசக்கர வாகனக்காரன் முந்தி செல்ல முயன்றான்.

கொஞ்சம் கூட தாமதிக்காத தேவநாதன்

டேய் பஸ்ல வந்து விழுந்தா முக்கா துட்டுக்கு பிரயோஜனப்பட மாட்ட ஏற்கனவே டிரான்ஸ்போர்ட்ல வேலை பாக்குறவங்க யாருக்கும் ரிட்டயர்மென்ட் காசு தரல. சம்பளமும் சரியாக இல்ல. இப்ப மகளிருக்கு இலவச பயண வேற தராங்க .அடிபட்டு அப்படி இப்படி செத்துப்போயிட்ட முக்கா துட்டு கிடைக்காது ஓரமா போ

என்று அந்த இருசக்கர வாகன ஓட்டியைப் பேருந்தில் இருந்தபடியே திட்டினார் தேவநாதன்.

இதைப் பார்த்தவர்களுக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் அவரை அறிவையும் மெச்சினார்கள் .

அவர் செல்லும் தடம் வரைக்கும் அந்த பேருந்து மிகவும் கலகலப்பு இருந்தது.

அதுவரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாமல் யாரோ எவரோ என்று பயணித்துக் கொண்டிருந்த பேருந்து பயணிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். தேவநாதன் சம்பாசனைகளை பற்றி அலசி ஆராய்ந்தார்கள்.

தேவநாதன் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.

ஐயா வர்றேன் என்று கையெடுத்து கும்பிட்டு அந்தப் பேருந்து விட்டு இறங்கினார்.

அவர் போனதும் அந்த பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் தேவநாதனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்

இப்படி ஒரு கிறுக்கனா இருக்கான் என்று ஒரு சிலரும்

மூளை குழம்பிப்போச்சு போல. அதான் அதிகம் படிக்கக் கூடாதுங்கிறது? என்று இன்னொரு சிலரும்

இவரெல்லாம் வீட்டில் வைத்து எப்படித்தான் சமாளிக்கிறார்களோ என்று சிலரும் பேசிக் கொண்டிருந்தார்கள் .

தேவநாதன் இறங்கி நடந்து கொண்டிருந்தார். சிக்னலில் அந்த பேருந்து மெல்ல சென்று கொண்டிருந்தது.

தன் கையில் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கொஞ்சம் வேகம் கலந்த நடையில் நடந்து கொண்டிருந்தார் தேவநாதன்.

அப்போது பேருந்தில் இருந்த ஒரு பெண் தன் காதலனுக்கு அமைதியான குரலில் ஆபாச வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள்.

இன்னொரு திருமணம் ஆன பெண்மணி தன் கள்ளக்காதலனிடம் வேற ஏதாவது பேசிக் கொண்டிருந்தாள்.

ஒரு ஆண் தன் மனைவியை விடுத்து வேறொரு பெண்ணுக்கு தன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.

ஒரு பிக் பாக்கெட் திருடன் யாருடைய பர்சைப் பதம் பாக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

இப்படி முறையற்ற உறவுகள், முறையற்ற செயல்கள் அந்த பேருந்தில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அவர்களெல்லாம் நிஜமான மனிதர்கள்.

யாரைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த ரகசியமும் இல்லாமல் தமிழைச் சரியாக உச்சரித்து தைரியமாகப் பேசிச் சென்ற தேவநாதனுக்கு அந்தப் பேருந்தில் இருந்த பயணிகள் வைத்த பெயர் “கிறுக்கன்”.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *