சிறுகதை

தேவதை வந்தாள் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

“இன்னைக்கு என்ன நாள்?”என்று என் மனைவி ஜானகியிடம் நான் கேட்டபோது, அவள் சலித்துக் கொண்டாள்..”ஊம்.. நமக்கு கலியாணமாகி இன்னையோட 8 வருஷங்களாகியும்…..” என்றவள் அழ ஆரம்பித்தாள்..

“அழாதே. நம்ம இரண்டு பேர் உடம்புகளிலும்தான் எந்த குறையுமில்லை.நூறு சதம் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்குனு ஒண்ணா, இரண்டா எத்தனை டாக்டர்கள் சொல்லியிருக்காங்க.

தவிரவும் நீயும் நானும் விரதமிருக்கிறது, மண் சோறு தின்கிறது.ஆலமரம் சுத்தறது, கோவில்களில் அபிஷேகம், அர்ச்சனை, அன்னதானம், உப்பிலியப்பன் திருச்சன்னதிகளில் துலாபாரம், குழந்தை எடைக்கு எடை கொடுக்கிறதாகவும்தான் வேண்டிக்கிட்டிருக்கோமே. அவன் மேல பாரத்தை போட்டுட்டு நம்பிக்கையோட இருப்போம்”என்றெல்லாம் பலவாறாய் ஜானகிக்கு சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

அப்போது எனதருமை நண்பன் குமாரைப் பார்த்தோம். இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து இரு வீட்டாரையும் பகைத்துக் கொண்டு கலியாணம் செய்து கொண்டவன், சமீபத்தில் தான் தன் மனைவியை இழந்திருந்தான். 1 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை ரமா . மெல்ல, மெல்ல அந்த குழந்தை முகம் பார்த்து ஆறுதல் தேடிக்கொண்டு தன் சோகத்திலிருந்து வெளிவர முயன்று கொண்டிருந்தான். அவனுக்கு கான்சர் முற்றிய ஸ்டேஜில் என்று தெரிய வந்தது. மரணத்தை நினைத்து அவன் கவலைப் படவில்லை..அனாதையாய் ஒரு பெண் குழந்தையை விட்டு செல்கிறோமே என்றெல்லாம் ராப்பகலாய் எண்ணி, எண்ணி என்னை ஒரு நாள் அழைத்து விபரம் சொல்லித் தன் மரணத்துக்கு பிறகு குழந்தையை எப்படியாவது நல்லதொரு இல்லத்தில் சேர்த்து விடச்சொன்னான்.

அப்போது நான் அவனிடம் சொன்னேன்..

“எங்களுக்கு குழந்தை இல்லை.அதனால் இந்த குழந்தை எங்களுக்கு கடவுள் கொடுத்ததாய் நினைத்து நாங்களே வளர்க்கிறோம்” என்ற போது

“உன் மனைவியின் சம்மதத்தை கேட்ட பிறகு முடிவெடு” என்றான்.

ஜானகியும் மறுப்பு சொல்லாமல் குழந்தையை தத்தெடுக்க சம்மதித்தாள். குழந்தையிடம் மிகுந்த பாசத்தை கொட்டினாள். ஏறக்குறைய மன நிலை பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருந்தவள் இப்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பினாள்.

குழந்தை வந்த ஓரிரு வாரங்களிலயே என் பிசினஸ் சூடு பிடித்து நிறைய லாபத்தை அள்ளிக் கொடுத்தது..

மாமியார் வீட்டு சீதனம் எதிபாராமல் வந்தது. பல வருடங்களாய் எங்கள் மூதாதையர் சொத்து வழக்கு, வியாஜியத்தில் இருந்ததும் வெற்றி பெற்று எல்லா சொத்தும் எங்கள் கைக்கே வந்தது..

முத்தாய்ப்பாய் ஜானகிக்கு நாள் தள்ளி போய் ஒன்றுக்கு, மூன்று டாக்டா்களிடம் செக்கப்புக்கு போக அவர்களும் ஊர்ஜிதம் செய்த போதுதான் ஜானகிக்கு ரமா மீது ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்திருந்தது.

“நமக்கே, நமக்குனு ஒரு குழந்தை வர இருக்கிறப்ப ஏன் இந்த குழந்தை?ஏதாவது காப்பகத்தில்……” என்றவளிடம் சீறினேன்..

“எந்தப் பிறவிகளில் என்ன பாவம் பண்ணினோமோ., இத்தனை வருடங்களா, நமக்கு குழந்தை பாக்கியமே இல்லாதப்ப, ரமாவை எடுத்து நாம் வளர்க்க ஆரம்பிச்சதும்தானே எல்லாமே கை கூடி வருது. நீயும் உண்டாயிருக்கே..இந்த சமயத்தில் நம்மை நம்பி ஒப்படைச்ச இந்த சின்னஞ்சிறு சிசுவை எங்கேயோ ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொண்டுக்கிட்டு போய் விடணும்னு சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது?”என்ற நான் பல நாட்கள் அவளிடம் முகம் கொடுத்து பேசுவதையே தவிர்த்தேன்.

ஊரில்தான் எத்தனை,எத்தனை அனாதை இல்லங்கள்..குழந்தைகள்  காப்பகங்கள், அப்படி குழந்தைகளை பெற்றவர்களின் அலட்சிய போக்கால், அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கூட எண்ணி பார்க்காமல்!

என்ன ஆனாலும் சரி, நண்பனுக்கு கொடுத்த வாக்குறுதியை நான் ஒருபோதும் மீற மாட்டேன்.எதன் பொருட்டும், யார் சொன்னாலும் குழந்தை ரமாவை நான் இழக்கத் தயாராய் இல்லை.

பல நாட்கள் நான் ஜானகியுடன் பேசவில்லை.

வீடே களையிழந்து போயிற்று. ஒருவாரம் போன பின் ஒரு நாள் ஜானகி என் கால்களில் விழுந்து “என் மனசை சாத்தான் வசம் கொடுத்திருந்தேன்.

இப்பத்தான் ஒரு தெளிவு பிறந்திருக்கு. எந்தக் காரணத்தை கொண்டும் ரமாவை இழக்க நான் தயாராய் இல்லைங்க.”என்றபோதுதான் நிம்மதி பெருமூச்சு விட்டேன்..

தேவதை வந்தாள் ரமா . என் மனைவியையும் தேவதை ஆக்கிவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *