புதுடெல்லி, டிச. 22–
டெல்லி ரோகினி பகுதியில் கடந்த வாரம் இ-மெயிலில் 2 பள்ளிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் அந்தப் பள்ளியின் மாணவர்களே என டெல்லி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லி சிறப்பு காவல்படையினர் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை செய்தபோது, அவை அந்தந்த பள்ளிகளில் படிக்கும் இரு மாணவர்களால் விடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இரு மாணவர்களும் பள்ளித் தேர்வுக்கு படிக்காததால் தேர்வை ஒத்தி வைப்பதற்காக இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் அழைத்து அறிவுரை வழங்கி டெல்லி போலீசார் அனுப்பி வைத்தனர்.
கடந்த 14–ந்தேதி இதேபோன்று ஒரு தனியார் பள்ளி மாணவன் பள்ளிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அவரது வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் அவரது நடவடிக்கை குறித்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தினர்
13 மற்றும் 17–ந்தேதிகளில் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 13–ந்தேதி அன்று மட்டும் 30 பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் வந்தன. இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.