நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைதான மாணவர்கள் வாக்குமூலம்
புதுடெல்லி, ஜூன் 20–
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகாரில் கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் தங்களுக்கு கிடைத்தது என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மே 5ம் தேதி 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் குளறுபடி எழுந்தது. நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக பீகாரில் 3 மாணவர்கள் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:– நீட் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் கிடைத்தது. அதனை நன்கு படித்து தேர்வுக்கு தயாரானோம். இதில் இருந்த கேள்விகளே, மறுநாள் தேர்வு எழுத சென்ற போது கேட்கப்பட்டு இருந்தது என்றனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் அனுராக் யாதவ் கையொப்பமிட்ட வாக்குமூல கடிதம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் தேர்வுக்கு முந்தைய நாள் எனது மாமா மூலம் கிடைத்த வினாத்தாளும், தேர்வின் வினாத்தாளும் ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர் அனுராக்கின் மாமாவான பிகார் டான்பூர் நகர அவையில் பொறியாளராக பணிபுரியும் சிக்கந்தர் பிரசாத் யாத்வேந்து மூலம் தான் தேர்வுக்கு முன்னதாகவே விடையுடன் வினாத்தாள் கிடைத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையே, நேற்று முன் தினம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தேசிய தேர்வு முகமை நெட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.