வினிதா முருகனைத் திருமணம் செய்து கொண்டு வந்ததிலிருந்து முருகன் தேர்தல் வந்தாலே மகிழ்வாகி விடுவார். அவர் தனக்கு பிடித்தமான கட்சி ஆட்களுடன் சேர்ந்து பரப்புரைக்குச் சென்று விடுவார். தேர்தல் வந்தாலே அவர் தான் செய்யும் வேலையில் கவனம் செலுத்தாமல் அவர் பரப்புரையில் கலந்து கொள்வதையே முனைப்பாகக் கொள்வார். காலையில் ஆறு மணிக்குச் சென்றால் இரவு பெரும்பாலும் பதினோரு மணிக்கே வருவார். வந்ததும் ஐநூறு ரூபாயைத் தந்து விட்டு தூங்கச் சென்று விடுவார். இவர் பரப்புரை செல்லும் நாட்களில் எல்லாம் வீட்டில் சாப்பிட மாட்டார். எல்லாம் கட்சிக்காரர்களே கவனித்து விடுவார்கள். வீட்டிற்கு வந்தவரிடம் ஏதாவது கேட்டால் பதிலே சொல்லாமல் மிகவும் களைப்பாக உள்ளதெனக் கூறி உறங்கச் சென்று விடுவார். இவர் தான் நிற்பது போன்ற பாவனையில் தான் செயல் படுவார். ஏதாவது காலையில் கேட்டால் இந்தத் தடவை குறைந்தது இருபதாயிரம் தேற்ற வேண்டுமெனக் கூறி சென்று விடுவார். வினிதாவிற்கு அவர் தொல்லை இல்லை என்று எண்ணினாலும் ஏதும் ஆகி விடக் கூடாதென்று நினைப்பார். இவருக்கு குடிப் பழக்கம் இல்லாததால் வினிதா சற்று நிம்மதியடைந்தார்.
முருகன் வினிதாவிற்கு பிள்ளை பாக்கியம் இல்லாத நிலை நீடித்துக் கொண்டிருப்பதை நினைத்து வினிதா அவ்வப்போது கலங்குவார். முருகன் கவலைப்படாதே நிச்சயம் நமக்கு பிள்ளை பாக்கியம் உண்டு என தேற்றுவார். முருகனுக்குத் தெரியாமல் வினிதா பல பூஜைகள் செய்து வந்தார். பலன் இன்னும் கிட்டவில்லை.
அன்று காலை முருகன் வெளியே சென்றதும் வினிதாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. அவளது தோழி ஊரிலிருந்து அழைத்திருந்தார். நடக்கும் தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் கூறினார். வாழ்த்துக்கள் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என்று சொன்னதும். எதிர் முனையில் என்ன இவ்வளவு மரியாதை என்றதும், வருங்கால பாராளுமன்ற உறுப்பினர் அல்லவா என்றதும், ஒரு சிரிப்பலையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அன்று இரவு வந்த முருகனிடம் வினிதா தன்னால் தனியாக இருக்க முடியாது நான் பத்து நாள் எங்க ஊருக்கு செல்லப் போகிறேன் என்றதும், முருகன் சரி உன் விருப்பம் சென்று வா என்றதும், மடை திறந்து நீர் பாய்வது போன்று மனதில் மகிழ்ச்சி பொங்கியது வினிதாவிற்கு.
மறு நாள் கிளம்பிய வினிதா அம்மா வீட்டை அடைந்ததும் அவர் அம்மா வா வா ஆச்சரியமாக உள்ளதே என்றார். இவர் தேர்தல் பரப்புரை என்று போய் விடுகிறார். வீட்டில் தனிமை கொள்கிறது . அதனனல் வந்தேன் என்றார். வினிதா அம்மா வினிதா காதில் ஏதோ கிசுகிசுக்க வினிதா அதைக் கேட்டு ஆனந்தமடைந்தார்.
ஊரில் இருந்த நாட்கள் இன்பமாகக் கழிய, இன்று ஊருக்குக் கிளம்ப வினிதா முடிவு செய்து தனது தோழியிடம் மீண்டும் வாழ்த்துக்கள் சொல்லி விட்டு வந்தார்.
அன்று காலை வீடு வந்த வினிதா தனது கணவனிடம் என்ன எல்லாம் முடிந்து விட்டதா என்றதும், முருகன் ஒரு கவரைத் தந்தார். அதில் பன்னிரண்டாயிரம் ரூபாய் இருந்தது. என்ன மகிழ்ச்சியா என்றார் முருகன். உடனே வினிதா தான் ஒரு கவரைத் தந்தார். முருகன் அதைப் பிரித்துப் பார்த்த போது இருபதாயிரம் ரூபாய் இருந்தது கண்டு முருகன் ஏது இவ்வளவு பணம் என்றார். எனது தோழி தேர்தலில் நிற்கிறார். அவருக்கு வாக்கு சேகரிக்கப் போனேன் அவர் தந்தார் என்றதும், முருகன் விக்கித்து நின்றார்.
வினிதா உடனே எப்படி நாம் இருவரும் சம்பாதித்தோம். இது அவர்களுக்கு தேர்தல். நமக்கு பணம் வரும் தேர்தல் விழா என்றார். அப்போது இதுகாறும் கேட்டுக் கொண்டு வந்த பக்கத்து வீட்டு நண்பர் இது தான் சரியான ஜோடி என்று கூறி சிரிப்பலையை உதிர்த்தார். ஆனால் அவர் மனதில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று ஒலித்தது.