போஸ்டர் செய்தி

தேர்தல் முடிந்தவுடன் கேபிள் டிவி கட்டணம் குறைக்க நடவடிக்கை: எடப்பாடி அறிவிப்பு

கரூர், மே.14–
தேர்தல் முடிந்த பிறகு கேபிள் டிவி கட்டணத்தை குறைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலம்பாடி, பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் அண்ணா தி.மு.க. வேட்பாளார் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (13–ந் தேதி) பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்து பேசியதாவது :-
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்தத்தேர்தல் எதனால் வந்தது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி பேராசையின் காரணமாக, சுயநலத்தோடு மாற்று அணிக்கு சென்றதனால் இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினராக்கிய, அமைச்சராக்கிய அண்ணா தி.மு.க.விற்கு துரோகம் செய்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி.
புரட்சித்தலைவி அம்மாவின் ஆணையை ஏற்று கடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் அண்ணா தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். நான் உட்பட பல அமைச்சர்கள் இங்கு இவரது வெற்றிக்கு இரவு பகல் பாராமல் பாடுபட்டு வெற்றி தேடித்தந்தோம். ஆனால் இவர் இதையெல்லாம் மறந்து தற்போது தி.மு.கவிலே இணைந்து, தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ம.தி.மு.கவில் இருந்து தி.மு.க. சென்றார். பின்னர் அண்ணா தி.மு.க. வந்தார்.
விசுவாசம் இல்லாதவர்
அண்ணா தி.மு.கவிலிருந்து அ.ம.மு.க. சென்று, தற்போது தி.மு.கவிற்கு போய் வேட்பாளராகி இருக்கிறார். இவர் எந்த கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சிக்கு விஸ்வாசமாக இருக்க மாட்டார். இவர் நான்காண்டுகளுக்கு மேல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருக்கும் போது கரூர் மாவட்டத்திற்கு என்ன திட்டங்களைக் கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். தன்னை வெற்றி பெறச் செய்த தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்தாரா என்றால் அதுவும் இல்லை. இவருக்கு வாக்களித்து,வெற்றி பெறச் செய்த மக்களுக்கு துரோகம் இழைத்தவர். இவருக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
தடுப்பணைகள் கட்ட ஆய்வு
நாட்டு மக்களுக்காக அதிக அளவில் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வரும் அரசு அம்மாவுடைய அரசு. அரவக்குறிச்சி பகுதி மிகவும் வறட்சியான பகுதி. இந்தப்பகுதிக்கு நீரேற்று மூலம் நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பெய்கின்ற மழை நீரை தடுத்து தடுப்பணைகள் கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக 4 ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அவர்கள் அளிக்கும் ஆய்வின் அடிப்படையில் எந்தெந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டுமோ, அந்த இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும்.
தேர்தல் முடிந்ததும்
ரூ.2 ஆயிரம்
பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடிட வேண்டும் என்பதற்காக ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதேபோன்று விவசாய தொழிலாளர்கள் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்து அந்த திட்டம் என்னால் துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் அறிவுரையின் பேரில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து அத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும்.
இடைத்தேர்தல் நடைபெறுகின்ற போது ஆளுகின்ற கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான் தனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தரக்கோரியும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கோரியும், தொகுதி மக்களின் கோரிக்கைகள சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரிடம் நேரடியாக வழங்கி திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுவார். ஆனால் எதிர் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் மக்களின் அடிப்படை தேவைகளை அவரால் நிறைவேற்றித்தர இயலாது.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது 88 பேர் உள்ளார்கள். இவர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாகவோ, அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் எனவோ என்னைச் சந்தித்து யாரும் கோரிக்கை மனு அளிக்கவில்லை. கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக ஸ்டாலின் பேசி வருகிறார். கருணாநிதி மற்றும் தயாநிதி மாறன் குடும்பத்திற்கு மட்டும் 40 டி.வி. சேனல் உள்ளது.
கேபிள் கட்டணம் குறைப்பு
இதில் சன் டி.வி குழுமத்தில் உள்ள சேனல்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் ரூ.56 கட்டணம் செலுத்தினால் தான் பார்க்க முடியும். கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக சொல்லும் ஸ்டாலின் இந்த சேனல்களை பொதுமக்கள் இலவசமாக பார்க்க ஏன் கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கூடாது. ஆனால் இது பற்றி ஸ்டாலின் வாய்திறக்க மாட்டார். இருப்பினும் தேர்தல் முடிந்த பிறகு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுக்கும். புரட்சித்தலைவி அம்மாவால் அறிவிக்கப்பட்ட 800 படுக்கைகள் கொண்ட கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கைக்கான மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். இந்தப் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்படுத்தி தரப்படும்.
ராகுல்காந்தியை பாரத பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரமே தெரிவித்திருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை என்ன? மு.க.ஸ்டாலினை தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிவுறாத நிலையில் ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொண்டார்.
சிறுபான்மையினர் மக்களுக்கு என்றும் அரணாக இருப்பது அண்ணா தி.மு.க. அரசு. சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும் அரசு, அம்மாவுடைய அரசு. இஸ்லாம் பெருமக்கள் ஹஜ் புனித பயணம் செய்ய மாநில அரசு நிதியிலிருந்து ரூ.6 கோடி வழங்கியது. 28 மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் ரூ.20,000 வழங்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி அரிசி இலவசமாக கொடுத்தது அம்மாவுடைய அரசு.
5400 டன் அரிசி 3000 மசூதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு இஸ்லாமிய மாணவர்கள் உருதில் தேர்வு எழுத அனுமதி வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மாவும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு செய்த உதவிகள் அனைத்தும் அம்மாவுடைய அரசு செய்து வருகிறது. நாங்கள் எதைச் செய்ய முடியுமோ, அதை மட்டும் தான் சொல்வோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே, அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதன் நல்ல பண்பாளர், எளிமையானவர், எந்த நேரமும் மக்களைச் சந்திக்கக் கூடியவர். இந்தத் தொகுதி மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். அவருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக் காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *