ஊட்டியில் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம்
ஊட்டி, ஏப்.16-–
பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.35 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தேர்தல் முடிந்ததும் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஊட்டியில் திறந்தவேனில் இருந்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:–-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தளபதியாக மட்டும் அல்ல, எனக்கு அரசியல் வழிகாட்டியாக ஆ.ராசா விளங்குகிறார். பொய்யாக புனையப்பட்ட 2ஜி வழக்கை உச்சநீதிமன்றம் வரை தனி ஆளாக நின்று போராடி, அனைத்து சூழ்ச்சிகளையும் வீழ்த்தினார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கியாஸ் சிலிண்டர் ரூ.500-–க்கும், பெட்ரோல் ரூ.75-க்கும் கொடுக்கப்படும். டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் டீசல் ரூ.65-–க்கும் தரப்படும். நீலகிரியில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.35 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வராத மோடி, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணிகளை விரைவுபடுத்தினார். பிரதமர் மோடியோ, அண்ணா தி.மு.க.வினரோ அப்போது வரவில்லை. மத்திய அரசு இழப்பீடு தொகையும் கொடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமை என அனைத்து உரிமைகளும் கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு இந்தியாவில் வாய்ப்பு இல்லை. பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியாது. இதுவரை 22 பேர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளனர். ஜெயலலிதா தமிழகத்தில் இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. அவர் இறந்த பின்னர் தான் நீட் தேர்வு வந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில குறைகள் உள்ளது. எனவே தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதங்களில் தகுதி உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
மத்திய அரசு நிதியில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் ஒரு செங்கல் மட்டுமே நடப்பட்டுள்ளது. ஆனால் நிதி கொடுக்கவே இல்லை. எனவே அந்த ஒரு செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். இதனால் என் மீது வழக்கு தொடுத்தால் கூட பரவாயில்லை. மருத்துவமனை கட்டும் வரை கல்லை தரமாட்டேன். இந்தியாவிற்கு நல்ல பிரதமர் வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அமைச்சர் ராமச்சந்திரன், தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கேட்க ஏராளமான கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது.