செய்திகள்

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் விஜயகாந்த் பங்கேற்பார்: சுதீஷ் பேட்டி

சென்னை, மார்ச் 15

விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வார் என்று தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது.

நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகளை அண்ணா தி.மு.க. -பாரதீய ஜனதா கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.

இதற்கிடையே பாரதீய ஜனதா தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கூட்டணி அமைத்த வி‌ஷயத்தில் எங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். கட்சியின் நலன் கருதியே நாங்கள் முடிவுகளை எடுத்துள்ளோம். கூட்டணி பேசியபோது சில வி‌ஷயங்கள் நடந்தது. என்றாலும் பாரதீய ஜனதா கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்பதை உறுதிப்படுத்தினேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார்.

அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அவர் தொகுதி வாரியாக வரும்போது தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள்.

கேப்டன் விரைவில் தீவிர கட்சி பணிகளை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர்தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் கேப்டன்தான் இறுதி முடிவு எடுப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *