செய்திகள்

தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை தர மறுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கி: காங்கிரஸ்ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சென்னை, மார்ச் 06–

தேர்தல் பத்திரங்கள் மூலமான நன்கொடை பற்றிய விவரங்களை மார்ச் 6 ந்தேதிக்குள் அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், பாஜகவின் கைப்பாவையாக மாறி, 3 மாத கால அவகாசம் கேட்கும் பாரத ஸ்டேட் வங்கிகள் முன்பு, இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பாரதீய ஜனதா அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது என்று, பிப்ரவரி 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அதிரடியாக அறிவித்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் மார்ச் 6, 2024 க்குள் வெளியிட்டும், அந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

வங்கிக்கு அழுத்தம்

இந்த தீர்ப்பினால் நிலை குலைந்தது பாரதீய ஜனதா கட்சி மட்டும் தான். ஏனெனில், 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேர்தல் பத்திர திட்டம் மூலமாக, இதுவரை கிடைத்த மொத்த நன்கொடை ரூ.12,000 கோடியில், பாஜக மட்டுமே ரூ. 6,566.11 கோடியை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த தேர்தல் பத்திர வசூலில் 55 சதவீதமாகும். ஆனால் மோடி அரசோ, இந்த தேர்தல் பத்திரங்களை பற்றிய விபரங்களை வெளியிடக்கூடாது என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்த அழுத்தம் காரணமாக தற்போது பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் பங்கு பத்திர விபரங்களை அளிக்கும் காலக்கெடுவை ஜூன் 30, 2024 வரை நீட்டித்து தருமாறு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல். அனைத்தும் கணினி மயமான நிலையில், பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதி மன்றம் கேட்ட தரவுகளை கொடுப்பதற்கு 3 மாதம் கால அவகாசம் எதற்கு?

பாரதீய ஜனதா பாரத ஸ்டேட் வங்கியை, தன் கைப்பாவையாக பயன்படுத்தும் முறைகேடு மற்றும் சதிகளை கண்டித்து, இன்றும் நாளையும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மாநிலம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

2 நாள் ஆர்ப்பாட்டம்

அதன்படி, தமிழ்நாட்டில் என் தலைமையில் இன்று (6 ந்தேதி) மயிலாடுதுறையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முன்பு மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார், மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ். ராஜ்குமார் மற்றும் முன்னணி தலைவர்கள் மற்றும் அனைத்து நிலை காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் பங்கேற்பார்கள்.

மார்ச் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அந்தந்த மாவட்டங்களிலும் அதேபோல் வட்டார அளவிலும் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பும், பாஜகவுக்கு சாதகமாக செயல்படும் பாரத ஸ்டேட் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து பெருந்திரள் போராட்டம் நடத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதன்படி, 7 ந்தேதி எனது தலைமையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தின் முன்பு, நாளை (மார்ச் 7) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார், மற்றும் மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள், நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாகப் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை அறிக்கையில் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *