பாரத ஸ்டேட் வங்கி மறுப்பு
புதுடெல்லி, ஏப்.3-
தேர்தல் பத்திரம் பற்றிய நிலையான வழிகாட்டு நடைமுறையை தெரிவிக்க முடியாது என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அத்திட்டத்தை ரத்து செய்தது.
தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனிடம் அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. அதன்படி, அந்த விவரங்களை வங்கி அளித்தது. அவை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தேர்தல் பத்திரங்களின் விற்பனை, பணமாக்குதல் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறையை தெரிவிக்கக்கோரி, அஞ்சலி பரத்வாஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இருந்தார்.
அதற்கு பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் எம்.கண்ணா பாபு பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அங்கீகரிக்கப்பட்ட கிளைகளுக்கு அவ்வப்போது பிறப்பிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் என்பது தேர்தல் பத்திரத்தின் விற்பனை மற்றும் பணமாக்குதல் தொடர்பான உள்மட்ட வழிகாட்டுதல்கள் ஆகும். அவற்றை தெரிவிப்பதில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8(1)(டி)-வது பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வணிக ரகசியங்கள், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட தகவல்களை அளிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு விண்ணப்பதாரர் அஞ்சலி பரத்வாஜ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து, அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும் இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த முக்கியமான தகவலை அளிக்க வங்கி மறுப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நடைமுறையை தெரிவித்தால்தான், வங்கிக்கு அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.