ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய செல்வப் பெருந்தகை
சென்னை, மார்ச் 15–
பாகிஸ்தான், சீனா போன்ற பகை நாடுகளில் இருந்து மட்டுமின்றி, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற நிறுவனங்களை பயன்படுத்தி, நிறுவனங்களை அச்சுறுத்தியும் தேர்தல் பணம் பறித்துள்ளது பாஜக என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டினார்.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக பாஜகவின் மகா ஊழல் வெளியாகி, நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தேர்தல் பத்திர ஊழல் மூலம் மிகப்பெரிய விஞ்ஞான ஊழலை பாஜக செய்திருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகிய சுயேட்சையான அமைப்புகளை பயன்படுத்தி, மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மிகப் பிரம்மாண்டமான ஊழலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியில் வந்தது.
மிரட்டி வசூல்
இந்த ஊழல்களை எங்கள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் கூறி வந்தார். அதேபோல் பாஜக இப்பொழுது தேர்தல் பத்திரம் மூலம் மாட்டிக் கொண்டுள்ளது. பாஜகவுக்கு நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை பார்த்தால், நாட்டின் பாதுகாப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பாகிஸ்தான், சீனா, வடகொரியா, உள்ளிட்ட நாடுகளிலிருந்து பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை ஏவி, நிறுவனங்களை மிரட்டி, ரவுடிகள் மாமுல் வாங்குவது போல் பாஜக நிதியை வசூலித்துள்ளது அதிர்ச்சிகரமாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஃபியூச்சர் என்ற ஒரு நிறுவனம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் தான் வணிகம் செய்கிறது. ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து 1386 கோடி ரூபாய் நிதியை, பாஜக தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது. அதேபோல் குயிக் சப்ளை செயின் என்ற நிறுவனம் 500 கோடி ரூபாய் வணிகம் செய்வதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் 400 கோடி ரூபாய் நிதியை பாஜகவுக்கு அளித்துள்ளது.
கள்ளப்பணம், கருப்பு பணம்
இதன் மூலம் பாஜக கள்ளப் படத்தை, கருப்பு பணத்தை உருவாக்கி அதையே நன்கொடையாக பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். இதற்கெல்லாம் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும். அதேபோல் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி லேப் ஒன்றிய அரசின் ரைடுக்கு உள்ளாகி பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. டோரண்ட் பவர் என்ற நிறுவனம் 1540 கோடி ரூபாய் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. அரசியல் லாபத்திற்காக மிரட்டி பணம் பறித்தது போல் இது போன்ற செயல்களை, பாஜக தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் செய்து வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.
மேலும் மேகா இன்ஜினியரிங் என்ற நிறுவனம் 2023 ஏப்ரல் 11ஆம் தேதி ரூபாய் 100 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. அதனை தொடர்ந்து ரூபாய் 14,000 கோடி ரூபாய் சுரங்க ஒப்பந்தத்தை பாஜக அரசிடமிருந்து பெற்றுள்ளது . இது நேரடியான கமிஷன் வாங்கியது போல் உள்ளது . அதேபோல் 2019 பிப்ரவரி 14 தேதி புல்வாமா தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து செயல்படும் “அப் பவர்” என்ற நிறுவன நிறுவனத்தில் இருந்து பாஜக பணம் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது.
பகை நாட்டு நிறுவனங்களில் இருந்து கூட பணம் பெற்று ஆதாயம் அடையும் இழிவான செயலில் பாஜக ஈடுபட்டிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. தேசத்தையே சூறையாடத்தியுள்ள இது போன்ற தகவல்களை தொடர்ந்து நாங்கள் இனி வெளியிட உள்ளோம். இதற்கெல்லாம் பாஜக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சீனா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பாஜக நிதி வாங்கி உள்ளது. தேசத்தின் பாதுகாப்பையே இதன் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.