செய்திகள்

தேர்தல் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

சேலம், மார்ச் 29–

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த தேர்தல் பணியில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.இதற்கிடையே சேலம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் வருவதாக கூறிய அரசு ஊழியர்களில் தற்போது தேர்தல் பணிக்கு வராமல் 1781 பேர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர்.

இதையடுத்து தேர்தல் பணியை புறக்கணித்து மருத்துவ விடுப்பில் சென்ற கல்வித்துறை ஊழியர்கள் 946 பேர் உள்பட 1781 பேருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான விளக்கம் அளிக்காதோர் சஸ்பெண்டு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இதே போல பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 21 பேரும் கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் பணிக்கு வருவதாக கூறி விட்டு தற்போது அதில் 20 பேர் பணிக்கு வர மறுத்துள்ளனர். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி , உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு செல்ல வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இது குறித்து கலெக்டர் பிருந்தா தேவி கூறுகையில், கட்டாய மருத்துவ விடுப்பு தேவைப்படுவோருக்கு மட்டும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும், மற்ற படி யாருக்கும் விலக்கு கிடையாது. கட்டாயம் தேர்தல் பணிக்கு வர வேண்டும், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *