சென்னை, மார்ச் 19–
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, நேற்று தனது பிறந்த நாள் என்பதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பேனர் வைத்துள்ளதாகவும், மகளிர் அணி நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தியதாகவும், அவர்களுக்கு உணவு வழங்கியதுடன், தையல் பயிற்சி மற்றும் எம்ராய்டிங் பயிற்சி வகுப்பில் சேர பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேனர் வைத்தது, கூட்டம் கூட்டி உணவு மற்றும் டோக்கன் வழங்கியதாக கூறி பிரேமலதா விஜயகாந்த் மீது கோயம்பேடு போலீசில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் புகார் அளித்தார். அதன்பேரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.