Uncategorized

தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதிர்ச்சி: கோவா மாநில பாஜக அமைச்சர் ராஜினாமா

காங்கிரசில் இணைகிறார்

பானாஜி, ஜன.10–

கோவா மாநில பாஜக அமைச்சர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிரந்து ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடக்கிறது. இங்கு முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க இக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மேலும் 2012க்கு பின்னர் தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெற மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கோவா சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில் கோவா மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான மைக்கேல் லோபோ திடீரென காங்கிரஸில் இணைவதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜக சற்றே பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

காங்கிரசில் இணைகிறேன்

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு அளித்து பேட்டியில், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் இன்று ராஜினாமா செய்யவுள்ளேன். இன்று மாலையே காங்கிரஸ் கட்சியில் சேருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது காங்கிரஸிற்கு பெரிய இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதன்மூலம் பாஜகவில் இருந்து பதவி விலகும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மூன்றாவது எம்.எல்.ஏ லோபோ என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வருகையால் பர்டேஸ் தாலுகாவில் காங்கிரஸ் கட்சி புது எழுச்சி பெறும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி சலிகவோ, சியோலிம் மற்றும் மபுசா ஆகிய தொகுதிகளிலும் மைக்கேல் லோபோ செல்வாக்கு பெற்ற நபராக விளங்குகிறார். எனவே சலிகவோ சட்டமன்ற தொகுதி வேட்பாளராக லோபோவை காங்கிரஸ் தேர்வு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *