செய்திகள்

தேர்தல் தொடர்பான நிவாரணங்களுக்கு நீதிமன்றத்தை நாட வேண்டும்

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம்

சென்னை, ஜூன்.7-

தேர்தல் தொடர்பான நிவாரணங்களுக்கு இனி கோர்ட்டையே நாட வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகம் முழுவதும் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவை 45 நாட்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். வேட்பாளர்கள் யாரும் தேர்தல் வழக்கு தொடர்வதற்கான காலஅவகாசமாக அவை 45 நாட்கள் பாதுகாப்பில் இருக்கும். தற்போது விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளரிடம் இருந்து புகார்கள் வந்ததாக தெரியவந்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு கோர்ட்டில் தேர்தல் வழக்குதான் தொடர முடியும். எனக்கு ‘இ-–மெயிலில்’ புகார் அனுப்பி இருப்பதாக கூறினால், அதுபற்றி தெரியவில்லை, பார்க்க வேண்டும்.

கோர்ட்டில் யாரும் தேர்தல் வழக்கு தொடர்ந்தால் கோர்ட்டின் உத்தரவின்படி, அந்த குறிப்பிட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு ‘விவிபாட்’ எந்திரங்களை பத்திரப்படுத்தி வைப்போம். தேர்தல் தொடர்பான எந்த ஒரு நிவாரணத்தைப் பெறவும் ஐகோர்ட் ஒன்றுதான் வழி. தேர்தல் கமிஷனிடம் புகார் கூறினாலும், பொதுவாக கோர்ட்டைதான் நாட வேண்டும்.

ஏனென்றால், மறு வாக்கு எண்ணிக்கை போன்றவற்றிற்கு உத்தரவிட கோர்ட்டுக்குத்தான் அதிகாரம் உள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் முடிந்த பிறகு மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்காது. தேர்தல் கமிஷனிடம் அவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அதன் உத்தரவுக்கு அவர்கள் காத்திருக்கலாம். தேர்தல் கமிஷன் உத்தரவிட்டால் அதை நிறைவேற்றுவோம்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள் உரிய ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி சட்டசபை இடைத் தேர்தலை 6 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் கமிஷன்தான் இதுகுறித்து முடிவெடுக்கும்.

தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெற்றுவிட்டதால், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்றவற்றிற்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் தொடர்பாக புகார் வந்திருந்தால் வாக்காளர் பட்டியல் அலுவலர் நடவடிக்கை எடுப்பார். வாக்காளர் பெயர் நீக்கப்பட்டிருந்தால் அவர் விண்ணப்பித்து பட்டியலில் பெயரை சேர்க்க முடியும்.

இந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். வாக்கு சதவீதம் குறைந்த வாக்குச்சாவடிகளின் விவரத்தை கேட்டுள்ளோம். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்.

தேர்தல் செலவு கணக்கு குறித்த ஆய்வு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் நடைபெறும். எனவே, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மீண்டும் வந்து பணியாற்றுவார்கள்.

70 சதவீத ஆதார் எண்கள், வாக்காளர்களிடம் இதுவரை பெற்றுள்ளோம். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாக்கும் வைப்பறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டும் வைப்பறைகள் கட்டப்பட வேண்டும். அந்த 6 மாவட்டங்களில் வைப்பறைகள் கட்டுவதற்கு அரசு நிதி ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *