செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்க அடுத்த தலைமுறை நவீனங்கள்?


ஆர்.முத்துக்குமார்


நடப்பு ஆண்டு சர்வதேச அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரும் சூழ்நிலை தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் நமது நாடு உட்பட உலகில் உள்ள 74 நாடுகளில் தேர்தல் மூலம் இந்தாண்டு புது தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாற்றம் தான் நிரந்தரம் என்பதை தேர்தல் களம் பலமுறை நமக்கு நிரூபித்து வருகிறது. இவ்வாண்டு நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல்களில் யார் யார் தலைத்தப்பும்? புதிய தலைவர் யார் பதவியில் அமருவார்கள்? போன்ற கேள்விகளும், விவாதங்களும் துவங்கும் நேரம் வந்துவிட்டது.

ஜனநாயக முறை முழுமையாக அரவணைக்கப்பட்ட நாடுகளில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் வாக்கு முறையில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதும் தொடர்கிறது. முன்னணி ஜனநாயகமும், தொழில் வல்லமையும் பெற்ற அமெரிக்காவில் கூட வாக்கு சீட்டு முறையிலும் பல தில்லுமுல்லுகள் நடந்ததாக புகார்களும், ஆதாரங்களும் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவிலும் புகார்

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற அப்போதைய ஜனாதிபதி டிரம்பும் கூட எலெக்ட்ரானிக் வாக்குமுறையில் கோளாறுகள், சதிகள் என புகார் தந்தார். அதற்கும் முந்தைய தேர்தலில் ஒபாமா அதிபராக வென்ற நாளில் இது ரஷ்யாவின் சதி என அப்போது பதவியில் இருந்த புஷ் காட்டமகவே விமர்சித்துள்ளார்.

ஜனநாயகத்தில் பேச்சு சுதந்திரம் உண்டு என்பதால் இப்படி ஆதாரமற்ற புகார்களை வெளியிடுகிறார்களா? அல்லது தீ யின்றி புகை வருமா? என சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளதா? என்ற மிகப்பெரிய கேள்வி, ஜனநாயக நாடுகளில் தேர்தல் ஆணையத்திற்கு முன் தோன்றும் சவாலாகவே இன்றும் இருக்கிறது.

பிரான்சு, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாக்காளர் ஆன்லைன் முறையில் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் வாக்களிக்கும் முறை இருக்கிறது. இப்படி யார்? எவர்? எங்கு இருக்கிறார்? என்ற முகம் தெரியாதவர் வாக்களித்தால் அதில் தில்லுமுல்லு சமாச்சாரம் எளிதில் வரும் என்ற அச்சம் ஏற்படத்தான் செய்கிறது.

எந்திரம் மீது புகார்

இதற்கு என்ன தான் தீர்வு? நம் நாட்டின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், தாங்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்த மின் வாக்கு முறையை தவறு என்று தற்போது இரண்டு முறை தொடர் தோல்விகளுக்குப் பிறகு விமர்சிக்கிறார்கள். தோற்ற கட்சியினர் தங்களது தோல்விக்கு ஓர் காரணத்தை கூறி, திசை திருப்ப எடுக்கப்படும் ஆயுதம் இந்த புகார் என்பதும் புரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான தொழில்நுட்ப வல்லுனர் சாம் பிட்ரோடாவோ சில வாரங்களுக்கு முன்பு மின்னணு வாக்குமுறை மீது அவநம்பிக்கை ஏற்பட்டு இருப்பதாகவும், வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரலாமே? என மத்திய அரசை கேட்டுள்ளார்.

வாக்குச்சீட்டு முறையில் மறையும் மை, காணாமல் போகும் வாக்குப்பெட்டிகள், போலி வாக்குப்பதிவுகள் என பல குற்றச்சாட்டுகள் இருந்ததை அவர் மறந்துவிடக்கூடாது!

தற்சமயம் வங்கிகளில் பல லட்சம் கோடி பண பரிவர்த்தனைகள் நடப்பதை அறிவோம். அது சிறிய தொகையாக இருந்தாலும் பல லட்சம் ரூபாய் பரிவர்த்தனையாக இருந்தாலும் தவறுகள் நடைபெறாமல் இருக்க ஓடிபி முறை இருக்கிறது அல்லவா? அது சரியான வாதம் கிடையாது தான், காரணம் அவ்வப்போது வங்கிகள் ஹாக்கர்களின் பிடியில் சிக்கி பல லட்சம் கோடிகள் இழப்பதையும் தலைப்புச் செய்தியாக பார்த்துள்ளோம்.

நம்பகத் தன்மை

ஆக வாக்குச்சீட்டு முறையானாலும், மின்னணு வாக்கு முறையானாலும் தவறுகளுக்கு வழிகள் இருக்கத்தான் செய்கிறது. சமீபமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சமாச்சாரங்களும், பெரிய தரவு வினோதங்களும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களின் நம்பகத்தன்மை 100 சதவிகிதம் இருக்கும்படி செய்துவிடும் என்று எதிர்பார்ப்போம்.

எது எப்படியோ, மக்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க துவங்கி விட்டால் வருங்கால நவீன தொழில்நுட்பங்கள் எல்லா துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தும். அச்சமயத்தில் தேர்தல்கள் கண்ணியமாய் மக்களின் தீர்ப்பும் பிழையின்றி வெளிவரத் துவங்கிவிடும்!

மக்களவை தேர்தல் நடைபெற தயார் நிலை குறித்து மாநில தேர்தல் ஆணையர்கள் ஆய்வு செய்யும் பணிகள் துவங்கி விட்டது. வரும் மே மாதத்தில் இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் அடுத்த ஆட்சியாளர்கள் யார் என்ற விடை கிடைத்துவிடும். தேர்தல் ஆணையம் பிறகு தள்ளி நின்றுவிடாமல் புதுத்தலைமுறை தேர்தல் முறைகள் பற்றிய விவாதங்கள், ஆராய்ச்சிகளையும் துவங்கிட தயாராக வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *