செய்திகள்

தேர்தல் செலவு கணக்கு காட்டாத 6 வேட்பாளர்கள் போட்டியிட தடை

தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை, ஏப். 29–

கடந்த 2021ல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, செலவு கணக்கு காட்டாமல் இருந்த மநீம உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் பல்வேறு விதிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலில் கட்சி சார்ந்து அல்லது சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை முறைப்படி தாக்கல் செய்ய வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இதனை அனைத்து வேட்பாளர்களும் பின்பற்றுவது அவசியமாகும். இதற்காக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதை தாக்கல் செய்யாவிட்டால் இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதாவது தேர்தல் செலவு தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யாத பட்சத்தில் அந்த வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

6 வேட்பாளர்களுக்கு தடை

இந்நிலையில் தான் கடந்த 2021ல் தமிழ்நாட்டில் நடந்த சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள் தேர்தல் செலவு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்காமல் டிமிக்கி கொடுத்தனர்.

இந்நிலையில் தான் அந்த வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது தேர்தல் செலவு கணக்கை காட்டாத வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட 3 ஆண்டு தடை விதித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் பிரபு, அதேதொகுதி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகேசன் ஆகியோர் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சகுந்தலா, சென்னை சைதாப்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் இளங்கோ, வெங்கடேஷ், சென்னை விருகம்பாக்கம் தொகுதி அண்ணா திராவிட மக்கள் கழக வேட்பாளர் தினேஷ்குமார் ஆகியோருக்கும் 3 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *