சென்னை, மார்ச்.28-
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொதுத்தேர்தல் – 2024 கையேட்டை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண மக்களை மட்டுமல்லாமல், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களின் வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனையிடுகின்றனர். அதில் நாங்கள் பாரபட்சம் காட்டவில்லை. சோதனையின் போது அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களை யெல்லாம் நிறுத்தி சோதனை செய்வது போக்குவரத்திற்கு இடையூறாகிவிடும்.
சோதனை பணிகளில் உள்ள வாகனங்கள் செல்லும் இடங்களை ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் கண்காணிக்கிறோம். சோதனைகளில் சில பிரச்சினை இருக்கலாம். ஆனால் தவறான நோக்கங்களுடன் கொண்டு செல்லப்படும் பணத்தை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம்.
சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதை தடுக்கவே இரவு 10 மணிக்கு பிறகு பிரச்சார கூட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமூகவலைதள பிரசாரங்கள் அப்படிப்பட்டதல்ல. மேலும், ஒருவர் விரும்பினால் மட்டுதான் அதற்குள் சென்று பார்ப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பி.ஐ.பி. கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வரவேற்றார். மத்திய மக்கள் தொடர்பகம் இயக்குனர் லீலா மீனாட்சி நன்றி கூறினார். இந்த கையேட்டை தயாரிக்க உதவியவர்களை இந்த நிகழ்ச்சியில் சத்யபிரத சாகு கவுரவித்தார்.