நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்
அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசியல் கட்சிகள் எடுக்கும் பல முடிவுகள் விசித்திரமாகவும், வாக்காளர்களுக்கும் முதுகு குத்தலாகவும் இருக்கலாம்! அதன் முதல் புள்ளியை போட்டவர் பீகாரில் நிதீஷ் குமார் ஆவார்.
அரசியலில் ‘பல்டி’ சகஜமானது தான், ஆனால் ஒரு அணியின் கேப்டன், இறுதி போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எதிர் அணிக்குச் சென்று விடுவது புதியது, வினோதமானது!
எதிர்க்கட்சிகளின் கூட்டணியாய் செயல்பட வைத்த சாமர்த்தியசாலி, பீகார் மாநில முதல்வர் நிதீஷ் ஆவார். பீகாரில் பாரதீய ஜனதாவால் பெரிய வெற்றியை எதிர்பார்க்க முடியாத நிலையில், லல்லு குடும்ப அரசியலை முறியடித்த நிதீஷ்குமாரை தங்கள் பக்கம் இழுக்க முடியாத நிலையில் தனித்தே போட்டியிட மிகப்பெரிய வெற்றியை பெற்றார் நிதீஷ். உடன் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறிப்பாக – தேசிய காங்கிரஸ் கட்சி நிதீஷ்குமாரை இறுக்கமாக அணைத்துக்கொண்டு தங்களோடு வைத்துக் கொண்டது.
ஆனால் நிதீஷ்குமாருக்கு வேறு பல கனவுகள் உண்டு என்பதை மறந்ததாலோ என்னவோ காங்கிரஸ், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார்.
அது மட்டுமா? பாரதீய ஜனதாவுடன் கூட்டு என்று அறிவித்ததுடன் தனது முதல்வர் பதவியை ராஜினமா செய்துவிட்டு, மீண்டும் பாரதீய ஜனதாவுடன் கூட்டாட்சி என்று அறிவித்து அன்றே மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் நிதீஷ்குமாருக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் தராததால் இப்படி ஒரு முடிவா? என கேட்கத்தான் தோன்றுகிறது.
2022 ஆகஸ்ட் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் மீண்டும் முதல்வரான நிதீஷ் குமார், 2023 ஜூன் மாதத்தில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டத் தொடங்கினார். பின்னர், ‘இண்டியா’ என நாமகரணம் சூட்டப்பட்ட அந்தக் கூட்டணிக் கட்சிகளின் மொத்த வாக்குவிகிதம் 38% எனப் பேசப்பட்டது.
பாஜகவின் வாக்கு சதவீதம் 37% தான். இண்டியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பாட்னாவில்தான் நிதீஷ் நடத்தினார். ஒருவகையில், அக்கூட்டணியின் மாதிரி வடிவமாக பீகார் அரசும் – அரசியல் களமும் இருந்தன.
இதற்கிடையே, 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பீகார் முதலமைச்சர் பதவி, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட வேண்டும் என ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால், பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் நிதீஷ் பரிதவிப்பில் இருந்தார்.
தவிர, இண்டியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் தான் நியமிக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். கடைசியாக நடந்த இண்டியா கூட்டணிக் காணொளிக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளராக நிதீஷை நியமிக்க சோனியா காந்தி தீர்மானித்திருந்த நிலையில், மம்தா பானர்ஜியின் அபிப்ராயத்துக்காகக் காத்திருக்கலாம் என்று ராகுல் காந்தி கூறியது நிதீஷை அதிருப்திக்கு உள்ளாக்கியது என்கிறார்கள்.
ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைத்தால் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாகும் என்று நிதீஷ் நினைத்திருந்தார். மல்லிகார்ஜுன கார்கேயை மம்தா பானர்ஜியும், அர்விந்த் கேஜ்ரிவாலும் முன்னிறுத்தியதை அவர் விரும்பவில்லை.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி பாஜகவுக்கு ஏற்கெனவே நிதீஷ் சவால்விட்டிருந்த நிலையில், பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு (1977–ல்) வழங்கிய கர்பூரி தாக்கூருக்குச் சமீபத்தில் பாரத ரத்னா விருதை பாஜக அறிவித்தது. அதை வரவேற்றதுடன் மோடியின் புகழ் பாடவும் தொடங்கினார் நிதீஷ். ஆர்ஜேடி ஆத்திரமடைந்தது. இண்டியா கூட்டணியும் கலகலத்தது. காட்சி மாறியது.
காங்கிரஸின் பிடிவாதமான அணுகுமுறையால் மேலும் பல சிக்கல்கள் விளைந்தன. கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் தேர்வுசெய்யப்படவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல்களில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்காமல் தனியாகக் களம் கண்டது முக்கியக் காரணமாக முன்வைக்கப்படுகிறது.
படுதோல்விக்குப் பிறகாவது தொகுதிப் பங்கீடு விஷயத்தில் துரிதம் காட்டவோ, இலகுவாக நடந்துகொள்ளவோ காங்கிரஸ் முயலவில்லை என்கிறார்கள். விளைவு, ராகுல் காந்தியின் ‘நியாய யாத்திரை’ மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு முன்னர், மம்தா பானர்ஜி 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்தார். பீகாரில் நுழைவதற்கு முன்னர் நிதீஷ் தனது பழைய அணிக்குத் தாவிவிட்டார்.
காங்கிரஸின் செல்வாக்குக் கணிசமாகச் சரிந்துவிட்ட உத்தரப் பிரதேசத்தில், அக்கட்சிக்கு 11 இடங்களை வழங்குவதாக சமாஜ்வாதி கட்சி கூறுகிறது; ஆனால், குறைந்தபட்சம் 15 இடங்களாவது வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டுகிறது. பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள். குஜராத், ஹரியானா மாநிலங்களில் தங்களுக்குக் கணிசமான இடங்களைக் காங்கிரஸ் தந்தால்தான் பஞ்சாப், டெல்லியில் அக்கட்சிக்குத் தொகுதிகளை ஒதுக்க முடியும் என்கிறது ஆம் ஆத்மி கட்சி. இப்படி நிறைய சிக்கல்கள்!
காங்கிரஸால் அதிருப்தி அடைந்திருந்தாலும் கூட்டணியை விட்டு வெளியேறாத மம்தா பானர்ஜி, இப்படியெல்லாம் நிதீஷ்குமார் செய்யக்கூடும் என முன்பே தெரிந்திருந்ததால்தான் அவரை ஒருங்கிணைப்பாளராக முன்னிறுத்தவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். நிதீஷ் வெளியேறியதால், பீகாரில் இனி காங்கிரஸ் – ஆர்ஜேடி – இடதுசாரிகள் இடையே தொகுதிப் பங்கீடு எளிதாகும்.இப்படிப்பட்ட சிக்கலை தீர்க்கும் பணியில் காங்கிரஸ் தலைமை சரிவர செயல்பட்டால் அது மக்களிடம் புதிய செல்வாக்கைப் பெற வழிவகுக்கலாம்!
எது எப்படியோ, பாரதீய ஜனதாவிற்கு வெற்றிப்பாதையில் சிதறிக்கிடந்த சில முட்புதர்கள் விலகி இருப்பது தான் உண்மை.