புதுடெல்லி, ஜன.18-–
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 400 நாட்களே இருப்பதாகக்கூறி, தேர்தலைச் சந்திக்க தயாராகுமாறு பாரதீய ஜனதா கட்சியினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் 9 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளன.
இந்த நிலையில், பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், டெல்லியில் ஜனவரி 16, 17-–ந் தேதிகளில் நடைபெறும் என்று அந்தக்கட்சி அறிவித்தது.
குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரையில்லாத வகையில் பாரதீய ஜனதா அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில் இந்த தேசிய செயற்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
அதன்படி, டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் உள்ள புதுடெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்ட மண்டபத்தில், பாரதீய ஜனதாவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
9 மாநில
சட்டசபை தேர்தல்
முன்னதாக அவர் டெல்லியில் பிரமாண்ட வாகன பேரணி ஒன்றை நடத்தி பொதுமக்களையும், கட்சியினரையும் ஒரு சேர ஈர்த்தார்.
கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய கட்சியின் தலைவர் நட்டா, இந்த ஆண்டு நடக்க உள்ள திரிபுரா, மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, சத்தீஷ்கார், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 9 மாநில சட்டசபை தேர்தல்களில் ஒன்றில்கூட பாரதீய ஜனதா வெற்றி பெற தவறிவிடக்கூடாது என வலியுறுத்திப்பேசினார்.
நேற்று 2-–வது நாள் கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பேசினார்கள்.
தொடர்ந்து, 35 மத்திய மந்திரிகள், பாரதீய ஜனதா ஆளும் 12 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், 37 மாநில பாரதீய ஜனதா தலைவர்கள் கலந்துகொண்ட தேசிய செயற்குழு கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–-
தேர்தலுக்கு இன்னும்
400 நாள் தான்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் உள்ளன. அதற்கு நாம் இப்போதே தயாராக வேண்டும். நாம் மக்களுக்கு முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் செய்யவேண்டும்.
நாம் வரலாறு படைக்க வேண்டும். நாம் 18 முதல் 25 வயது வரையிலான இளைய தலைமுறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு முந்தைய அரசுகள் செய்த ஊழல்கள் என்ன, தவறுகள் என்ன என்பது பற்றிய வரலாறு தெரிந்திருக்காது.
அவர்களுக்கு நாம் இவற்றைத் தெரியப்படுத்தவேண்டும். அவர்களுக்கு ஜனநாயக வழிமுறைகள் பற்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாரதீய ஜனதாவின் நல்லாட்சி பற்றி தெரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும்.
நாம் சிறுபான்மை மக்களாகிய போராக்கள், பஸ்மந்தாக்கள், சீக்கியர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் சென்றடைய வேண்டும். இந்தியாவின் மிகச்சிறந்த சகாப்தம் இனிதான் வர உள்ளது. நாம் அதன் வளர்ச்சிக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்.
பா.ஜ.க. சமூக இயக்கம்
கிராமங்களில் குறிப்பாக எல்லையோர கிராமங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இதன்மூலம் நாம் அங்குள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள முடியும். வளர்ச்சித் திட்டங்கள் அவர்களை சென்றடையவும் முடியும்.
பாரதீய ஜனதா கட்சி வெறும் அரசியல் இயக்கம் கிடையாது. அது சமூக இயக்கம் ஆகும். மேலும், இது சமூக பொருளாதார நிலைகளை மாற்றும். எதிர்க்கட்சிகளை நாம் பலவீனமாக கருதக்கூடாது. கட்சியை ‘பூத்’ அளவில் நாம் வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக மராட்டிய மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.