செய்திகள்

தேர்தலுக்கு முன் கூட்டியே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா திடீர் ராஜினாமா

வெலிங்டன், ஜன. 19–

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7–ம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14–ம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.

42 வயதான ஜெசிந்தா ஆர்டெர்ன் இது குறித்து கூறுகையில், “நான் எனது பணிக்காலத்தில் அந்தப் பதவியின் வாயிலாக என்ன செய்யலாம் என்ற நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதை செய்ய முடியவில்லை. அப்படியிருக்க இன்னும் அப்பதவியில் தொடர்வது பதவிக்கு பொருந்தாதது என்று கருதுகிறேன்” என்றார்.

ஜெசிந்தா ஆர்டெர்ன் உலக வரலாற்றில் பிரதமர் பதவியை வகித்த இளம் வயது பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றவராவார். 2017ல் பிரதமராக பதவியேற்கும் போது அவருக்கு வயது 37. அவரது பதவி காலத்தில் கொரோனா பெருந்தொற்று சவாலை திறம்பட எதிர்கொண்டார். பொருளாதார மந்தநிலை, ஒயிட் தீவு எரிமலை வெடிப்பு என பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.

இவற்றைப் பற்றி ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், “தேசத்தை அமைதியான சூழலில் வழிநடத்துவதற்கும் சவால்களுக்கு மத்தியில் தலைமை ஏற்று வழிநடத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பெரிய சவால்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது. அந்த அழுத்தத்தின் ஊடே அரசாங்கத்தை நிர்வகிக்கிறோம். இந்த சவால்களை சுமக்க அதற்கு தீர்வு காண புதிய வலுவான தோள்கள் தேவை. அதனால் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.

இருப்பினும், நியூசிலாந்து மக்கள் என்னை எப்போதும் அன்பான தலைவராக நினைவில் கொள்வார்கள் என நம்புகிறேன். நியூசிலாந்து தலைமைப் பொறுப்பை நான் ராஜினாமா செய்யும் இச்சூழலில் நான் உங்களுக்கு சில உணர்வுகளை விட்டுச் செல்வதாக நம்புகிறேன். எனது தலைமையிலான அரசு காலநிலை மாற்றம், சமுதாய குடியிருப்புகள் அமைத்தல், குழந்தைகளின் வறுமையை ஒழித்தல் ஆகியனவற்றில் குறிப்பிடத்தக்க பணிகளை செய்துள்ளது” என்று கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *