செய்திகள்

தேர்தலுக்குப் பிறகும் ஊரடங்கு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

சென்னை, ஏப். 5–

தேர்தலுக்குப் பிறகும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக அதிகரிக்கிறது. வாக்காளர்கள் நாளை முகக்கவசம் அணிந்துதான் வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்குச் சாவடிகளில் முகக்கவசம் தருவார்கள் என்று வரக் கூடாது. தேர்தலில் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும்.

தடுப்பூசி போட வேண்டும்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு பிபிஇ கிட் வழங்கப்படும். அதேபோல், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, ஃபேஸ் ஷீல்டு வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

மேலும் கூறும்போது, கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏப்ரல் 7ஆம் தேதிக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்படும். 54 லட்சம் கொரோனா தடுப்பூசி நம்மிடம் இருந்தாலும், தினமும் 15 ஆயிரம் பேர்தான் தடுப்பூசி போடுகின்றனர். கொரோனா பரவாமல் இருக்க, தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு என பரவும் வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம் என்று கூறிய அவர், காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *