செய்திகள்

தேர்தலில் வென்றால் ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம்

கர்நாடக அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு தொடங்க குவியும் பெண்கள்

பெங்களூரு, மே 30–

காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 1 லட்சம் ரூபாயை பெறுவதற்கு கர்நாடகாவில் பெண்கள் புதிய சேமிப்புக் கணக்கை தொடங்க தபால் அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர்.

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு காரணம் காங்கிரஸ் அறிவித்த திட்டங்கள். அதில் ஒன்று ஆண்டுக்கு ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம்.

நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. இது சாத்தியமாகுமா? என பல கேள்விகளும் எழுந்தன.

நம்பிக்கையுடன் பொதுமக்கள்

இந்நிலையில் பெங்களூருவின் சில பகுதிகளில் காங்கிரஸின் அறிவிப்பின்படி மாதம் ரூ.8500 வழங்கப்பட உள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. இந்த தகவலை அறிந்த பெண்கள், பெங்களூரு கப்பன் பார்க் பகுதியில் உள்ள தபால் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். அங்கு புதிய கணக்கை துவங்கி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இது நடந்து வருகிறது. நாளுக்கு நாள் கூட்டம் இன்னும் கூடுவதால் அலுவலக பணியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் இதற்கென சிறப்பு கவுண்ட்டரும் திறந்துள்ளனர்.

புதிய கணக்கை துவங்குவதற்காக நாளுக்கு நாள் பெண்கள் கூட்டம் அதிகமாக வருவதால், அலுவலக பணியை பாதிப்பின்றி தொடர புதிய கவுண்ட்டரை திறந்துள்ளனர். அந்த கவுண்டருக்கும் தனியாக தபால் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 4 மணியிலிருந்தே பெண்கள் வரத்தொடங்குவதாக அலுவல பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன்படி வரிசையில் நின்று கணக்கு துவங்கி வருகின்றனர்.

இதுகுறித்து அங்கு வரும் பெண்கள் கூறும்போது, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், ‘மாதந்தோறும் பணம் வரவுள்ளதாகவும், அதற்காக புதிதாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும் எங்கள் பகுதியில் சிலர் தெரிவித்தனர். அதனால்தான் தபால் சேமிப்பு கணக்கு தொடங்க இங்கு வந்தோம். ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியுள்ளது. ராகுல் காந்தி அறிவித்த தொகை எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *