செய்திகள்

தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இல்லை

Makkal Kural Official

நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி

பெங்களூரு, ஏப். 26–

ஓட்டு போடுவது மிக முக்கியம், ஓட்டு போடவில்லை என்றால் தவறை தட்டிக் கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

இன்று அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.

உரிமை இல்லாமல் போய்விடும்

இந்நிலையில், பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது:–

‘வாக்களிப்பது முக்கியமான விஷயம். இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்க போகிறவர்கள் தான் உங்களுடைய எதிர்காலத்தை முடிவு செய்பவர்கள். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுபவர்கள். உங்களுடைய குரலை எழுப்பவர்கள் எல்லாம் நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான். எனவே ஓட்டு போடுவது மிக முக்கியம். ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லாமல் போய்விடும் என்பதை மறந்துவிடக் கூடாது. இளம் வாக்காளர்களுக்கு இது நல்ல அனுபவமாக இருக்கும். இந்த மகிழ்ச்சி உங்களுக்கு கிடைக்கும். உங்கள் தலைவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் பிரதிநிதியை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அனைவரும் வாக்களியுங்கள் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *