புதுடெல்லி, மார்ச்.28-–
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் பலரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
டெல்லியில் நேற்று நடந்த ஒரு ஆங்கில செய்தி சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் இதுபற்றி பார்வையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-– பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு என்னை கேட்டுக்கொண்டார். நான் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் அதுபற்றி யோசித்தேன். பிறகு திரும்பிப்போய் சொன்னேன். ‘‘தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. ஆந்திராவா, தமிழ்நாடா என்பதிலும் எனக்கு பிரச்சினை இருக்கிறது. மேலும், வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோல் பற்றியும் கேள்விகள் எழும். நீங்கள் அந்த சாதியா? அந்த மதமா? இந்த ஊரா? இப்படி கேள்விகள் வரும். எனவே, என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது’’ என்று சொல்லி விட்டேன். அவர்கள் என் வாதத்தை ஏற்றுக்கொண்டனர்.ஆகவே, நான் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.