போஸ்டர் செய்தி

தேர்தலில் தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுங்கள்: எடப்பாடி அறைகூவல்

Spread the love

சேலம், பிப். 25–

விவசாயிகளுக்கு துரோகம் செய்த தி.மு.க.வுக்கு எந்த தேர்தல் வந்தாலும் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

விவசாயிகளை புறக்கணிப்பவர்கள் ஆட்சிக்கு வரவே முடியாது என்று உறுதிப்பட கூறினார்.

சேலத்தில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தார்கள். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

எடப்பாடி பழனிசாமி விவசாயி என்று சொல்கிறாரே, கையில் அழுக்கு இருக்கிறதா, மண் இருக்கிறதா என்று கேட்கிறார் ஸ்டாலின். விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர் அப்படித்தான் பேசுவார். விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்று சொன்னால் அது தமிழ்நாட்டிலிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தான். அவருக்கு யாரோ எழுதிக் கொடுப்பார்கள், அதை படித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஈரோட்டில் கரும்புத் தோட்டத்தை பார்க்கப் போகிறார், அழுக்கு படக்கூடாது என்று சாக்ஸ் போட்டுக் கொண்டு செல்கிறார். நானும் தான் நெல் அறுவடை செய்தேன். அப்படியா போனேன்? இந்தக் கை மம்முட்டி பிடித்த கை, ஏரோட்டிய கை, இந்தக் கால் சேற்றை மிதித்த கால். ஸ்டாலின், விவசாயத்தைப் பற்றி தெரிந்து பேச வேண்டும், விவசாயத்தைப் பற்றி கொச்சைப்படுத்தி பேசாதீர்கள். பச்சைத் துண்டு போட்டவர்களெல்லாம் விவசாயி என்று சொல்கின்றார். உண்மையிலேயே விவசாயி ஒருவன் தான் பச்சைத் துண்டை போட முடியும், அந்த எண்ணம் விவசாயிக்குத் தான் வரும். விவசாயம் செழித்தால் நாடு செழிக்கும். விவசாயி சேற்றிலே கை வைத்தால் தான், நாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்று பழமொழி உண்டு.

கொச்சைப்படுத்த வேண்டாம்

அப்படிப்பட்ட விவசாயியை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம். தயவு செய்து, அருள் கூர்ந்து, இப்படிப்பட்ட பேச்சை விட்டுவிட்டு, விவசாயி எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக இருந்து கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். விசித்திர விவசாயி என்று முரசொலி பத்திரிகையில் வந்தது. நான் விசித்திர விவசாயி தான். ஏனென்றால், விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுக்கின்றேன், அதனால் விசித்திர விவசாயி நான்தான். நீர் மேலாண்மைத் திட்டத்தை கொண்டு வந்தேன், விசித்திர விவசாயி. குடி மராமத்துத் திட்டத்தைக் கொண்டு வந்தேன், விசித்திர விவசாயி. ஆகவே, விசித்திர விவசாயியாக இருக்கின்ற காணத்தால் தான் இப்படிப்பட்ட திட்டத்தை இந்த நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறேன் என்பதை ஸ்டாலின், உங்கள் பத்திரிகையின் மூலமாக என்னைப் பாராட்டியதற்கு நன்றி.

ஸ்டாலினுக்கு கோபம் ஏன்?

காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கின்றேன். அதை பொறுக்க முடியவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி, ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று சொன்னார்கள். போராட்டம் செய்த விவசாயிகளின் நெஞ்சம் குளிரவும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், அம்மாவுடைய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டம் இனி தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் வராது என்ற அறிவிப்பை அறிவித்தேன். பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன். உடனே ஸ்டாலினுக்கு கோபம் பொங்கி விட்டு வந்துவிட்டது. இப்படி முதலமைச்சர் அறிவிப்பார் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அறிவித்தவுடன் ஸ்டாலின் பேசுகிறார், இது நடைமுறைபடுத்த முடியுமா என்று. இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு என்று நிரூபித்து காட்டினேன். உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். நெற்களஞ்சியமாக இருக்கின்ற டெல்டா பகுதிகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலமாக பாலைவனம் ஆகிவிடும். ஆகவே நாங்கள் கொண்டு வருகிற பாதுகாப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கேட்ட உடனே அவர்களும் உதவி செய்தார்கள். ஆகவே மாநில அரசே முடிவு செய்யலாம் என்ற அறிவிப்பையும் அவர்கள் வழங்கினார்கள். அதன் அடிப்படையிலே, அம்மாவுடைய அரசு டெல்டா மாவட்டத்திலே இருக்கின்ற சில பகுதிகளில் பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இன்றைக்கு அரசிதழில் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறது. உங்களால் முடிந்ததா?

மீத்தேன் கொண்டு வந்தது நீங்கள்…

ஸ்டாலின் பேசுவதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.

ஏன் என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது தி.மு.க.. 1996 ராஜஸ்தானில் முதன்முதலில் கண்டுபிடித்தார்கள். அப்பொழுது தி.மு.க.வை சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு இந்த திட்டத்தை தமிழகத்திலே கொண்டு வருவதற்கு முயற்சி செய்து 2010-ல் மீத்தேன் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அத்திட்டம் கொண்டு வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் செய்தார்கள். அப்படிப்பட்ட ஸ்டாலின் அவர்களே, இப்படி கேட்பதற்கும் சொல்வதற்கும் சிறிதளவும் தகுதியில்லை என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கொண்டு வந்தீர்கள் அதை தடுத்து நிறுத்திய அரசு அம்மாவுடைய அரசு. அதற்கு சட்டம் இயற்றப்பட்டு இருக்கின்றன. இன்றைக்கு அண்ணா தி.மு.க.வின் விவசாயி முதலமைச்சராக இருந்த காரணத்தினாலே இந்த சட்டத்தை நான் அமல்படுத்தி இருக்கின்றேன். ஒரு விவசாயி முதலமைச்சராக இருந்து, பாதுகாப்பட்ட வேளாண் மண்டலம் சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த போது, அந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக வெளிநடப்பு செய்தவர்கள் ஸ்டாலினும், தி.மு.க.வும் தான்.

விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்

உங்களை ஒருக்காலமும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள். விவசாயிகளை புறக்கணிப்பவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. திட்டமிட்டு இந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக என்னென்ன எல்லாம் பேசினீர்கள். நான் ஏற்கனவே தலைவாசல், கூட்ரோட்டிலே கால்நடை பூங்கா துவக்க விழாவிலே காவிரி டெல்டா பகுதி பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவித்தேன். அந்த அறிவிப்பை சட்டமன்றத்திலே சட்டமுன்வடிவாக கொண்டு வந்தோம். இதை எதிர்த்து நீங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறீர்கள். இது நியாயமா, இது தர்மமா, இது விவசாயிகளுக்கு செய்கின்ற நன்மையா. எண்ணிப் பார்க்க வேண்டும் விவசாயிகள். ஓட்டுமொத்த டெல்டா பகுதிகளிலே இருக்கின்ற விவசாயிகள் எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.விற்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். விவசாயிகள் சக்தி என்ன என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும். மண்ணிலே ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் விவசாயிகளை காப்பது அம்மாவின் அரசினுடைய கடமை என்று கருதி நாங்கள் செயலாற்றி கொண்டு இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *