செய்திகள்

தேனி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் : நெருக்கடி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம்

தேனி, ஜூலை.1–

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து நெருக்கடி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் நிலவரம், தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கடந்த 23.6.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசித்தபடி மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் எண்ணிக்கை குறைந்து சீரடைந்து வருவதாக தொிவித்தனர். தற்போது,

தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் வருகின்ற 5.07.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற அறிவிப்பானது கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்திட உதவியாக அமையும் என தரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தற்போது உள்ள நிலையே எதிர் வருகின்ற 15 தினங்களுக்கு தொடர வேண்டும் என்றும் பேரூராட்சிப்பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 2 மணிவரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும் தற்போது நகராட்சிப்பகுதிகளில் திறக்கப்படாத கடைகளை பேரூராட்சிப்பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளிலும் திறந்திட வேண்டாம் என ஆலோசனை தெரிவித்தார்கள். மேற்கண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்வதன் மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட முடியும் என்றும் தெரிவித்தனர். மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அனைத்து வணிகர் சங்கங்களும் முழுமையாக கடைபிடித்திட முன்வருவதாக தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலன் கருதி தெரிவித்த ஆலோசனைகளை மாவட்ட கலெக்டர் வரவேற்பதாக தெரிவித்தார்.

ஆகவே தேனி மாவட்டத்தில் தற்போது நகராட்சிப்பகுதிகளில் உள்ள நேர கட்டுப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்ற விதிமுறைகள் தொடரவும் பேரூராட்சிப்பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளிலும் கடைபிடித்திடவும் இக்கூட்டத்தின் வாயிலாக முழு மனதாக தீர்மானம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *