செய்திகள்

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

புதுடெல்லி, பிப்.18-

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது; மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பே முக்கியம் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன் காரணமாக தேனி பொட்டிபுரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து சுரங்கம் அமைத்து ஆய்வுக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஆய்வுக்கூடத்தில் நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

முதலில் அந்த மலையை சுற்றி வேலி அமைக்கப்பட்டது. மேலும் 12 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரைகீழ் தொட்டி ஒன்றும் கட்டப்பட்டது. ஆனால் கோர்ட் வழக்கு காரணமாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது,

இந்த மனுவை நீதிபதிகள் வினீத் சரண், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 14ந்தேதி நடந்த விசாரணையின்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி, இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் தேவை என கோரி வாதிட்டார்.

வாதத்தை ஏற்ற நீதிபதிகள் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கிறோம். வழக்கு விசாரணையை வருகிற 22ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கிடையே தமிழக அரசு நேற்று முன்தினம் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

திட்ட அமைவிடம் மதிகெட்டான் பெரியார் புலிகள் இடம்பெயரும் பாதையில் அமைந்துள்ளதால் ‘தி டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச்’ அமைப்புக்கு இத்திட்டத்திற்கான காட்டுயிர் வாரிய அனுமதி வழங்க முடியாது என மாவட்ட வனத்துறை அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.

இத்திட்ட அமைவிடம் உலக அளவில் உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள போடி மேற்கு மலையாகும். இந்த போடி மேற்கு மலையானது புலிகள் வசிக்கக்கூடிய மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கம்பம் பள்ளத்தாக்குடன் இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்குகிறது.

இந்த இணைப்பு பகுதி புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கும் அவைகளின் இனப்பெருக்க பரவலுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த மலையில் மிகச்சிறிய அளவில் மனித செயல்பாடுகளால் அதிர்வுகள் ஏற்பட்டால் கூட புலிகளின் நடமாட்டம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இந்த மலைப்பகுதியை புலிகள் தவிர்க்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுவிடும்.

மேலும் இந்த மலை பகுதி, வைகை அணைக்கு நீர் தருகின்ற பெரியாறு நதியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது.

திட்டத்திற்காக அமைக்கப்படும் குகையானது மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் ஆழத்திற்கு பூமிக்கடியில் அமைக்கப்பட்டாலும் கூட அக்குகை அமைப்பதற்கான சுரங்கம் அமைக்கும் பணி வெடிபொருள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச்செல்லும் போக்குவரத்து, பெரிய பெரிய எந்திரங்கள், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புலிகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் நடமாட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.

மக்களின் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பிரதமர் மோடியிடம் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கொண்ட குழு கடந்த ஆண்டு மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறியுள்ளனர்.

எனவே இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வகையில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கூடுதல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.