தேனி, ஜன. 11–
தேனியில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனில் திருட முயன்ற போது, அதனை தடுத்த போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
தேனி மாவட்டம் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக விற்பனை மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது, அவர்களை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடிக்க முற்பட்டார். இதனை பார்த்து உஷாரான கொள்ளையர்கள், அந்த போலீசாரை பயங்கரமாக தாக்கி விட்டு, தப்பி ஓடினர். இதில், போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். ஆனால், அதன் பின்னால் வந்த மற்ற போலீசார், சாதுர்யமாக செயல்பட்டு, அந்த கொள்ளையர்களை பிடித்தனர்.
பின்னர், இருவரையும் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம், பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு விசாரணை நடத்தி வருகின்றார். ஸ்டேஷனில் இருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை எடுத்துச் செல்ல இவர்கள் வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.