தேனி, டிச. 12–
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடிகர் அஜித்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளதோடு, வெறும் 2 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் ‘துணிவு’ படத்தில் அஜித் நடித்துள்ளார். அந்த படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர்- கம்பம் செல்லும் சாலையில், அஜித் ரசிகர் நடத்தும் ‘வீரம் ரெஸ்டாரன்ட்’ கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கடை திறப்பு விழாவின்போது முக்கிய அம்சமாக துணிவு படம் வெளியாவதை முன்னிட்டு சுமார் எட்டு அடி உயரம் கொண்ட நடிகர் அஜித் சிலையை தத்ரூபமாக அமைத்து கடையின் முன் பகுதியில் வைத்துள்ளனர்.
2 ரூபாய்க்கு உணவு
இந்த சிலையை காண்பதற்கு ஏராளமான அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியதால் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் துணிவு படம் வெளியாவதை முன்னிட்டு உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புரோட்டா, தேநீர், வடை, ஆகிய உணவு பொருள்களை இரண்டு ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் சின்னமனூர் தனியார் உணவகத்தை நோக்கி படையெடுத்து வந்து உணவுப் பொருள்களை வாங்கி செல்கின்றனர்.