சிறுகதை

தேனப்பன் எழுதிய கவிதை! | சின்னஞ்சிறுகோபு

அது பூவரசம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி. ஆறாம் வகுப்பு ‘சி’ பிரிவு. அந்த வகுப்பிலிருந்த நம்ம தேனப்பனும் நம்ம ராமநாதனும் மற்ற மாணவ மாணவிகளும் ஆசிரியர் சண்முகம் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“நம்ம பள்ளிக்கூடம் ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் முடியப் போகிறது. அதனால் இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு விழா கொண்டாடப் போகிறார்கள். அதற்காக விழா கமிட்டி அமைத்து பல நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள். அந்தப் விழாவில் பொன்விழா மலர், அதாவது நம் பள்ளியை பற்றி ஒரு புத்தகம் வெளியிடப் போகிறார்கள்” என்றார்.

‘ஐயயோ…அந்த புத்தகத்தைப் படித்தும் பரீட்சை எழுத சொல்வார்களோ’ என்று ராமநாதனுக்கு பயமாக இருந்தது.

தேனப்பனுக்கோ, ‘அந்த பள்ளிக்கூட பொன்விழாவில் எல்லோருக்கும் ஆரஞ்சு வில்லை மிட்டாய் கொடுப்பாங்களா, மாட்டாங்களா’ என்று சந்தேகம் வந்தது. அதை அவன் எழுந்து கேட்டும் விட்டான்!

ஆசிரியர் சண்முகம் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “கவலைப் படாதே, நம் பள்ளியில் உள்ளவர்கள் எல்லோருக்கும் விழா நடக்கிற தினத்தில் வடைப் பாயசத்துடன் சாப்பாடே உண்டு!” என்றார்.

அதன்பிறகு, “நான் சொல்லுவதை தொடர்ந்து கேளுங்கடா!” என்றபடி பேச்சை தொடர்ந்தார்.

“அந்த விழா புத்தகத்தில் போட ஒரு கவிதைப் போட்டியும் வைத்திருக்கிறார்கள். ‘இயற்கை’ என்ற தலைப்பில் புதுக்கவிதை, மரபுக்கவிதை எது வேண்டுமானாலும் எழுதலாம். நம் பள்ளி மாணவர்கள் ஆறாவதிலிருந்து பத்தாம் வகுப்புவரை யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம்.

பிரபல சினிமா பாடலாசிரியர் மலரவன் நம் பள்ளியின் முன்னாள் மாணவர். அவர்தான் நம்ம பள்ளிக்கூட மாணவர்களின் கவிதைகளிலிருந்து பத்து கவிதைகளை தேர்ந்தெடுக்கப் போகிறார். அதில் அவர் மிகச் சிறந்த கவிதை என்று கருதும் ஒரு கவிதைக்கு அவர் தனது சொந்த பணத்திலிருந்து ஆயிரம் ரூபாய் பரிசும் கொடுக்கப் போகிறார்” என்று சொல்லிவிட்டு, எழுந்துப்போய் பானையிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு வந்தார்.

“ஆயிரம் ரூபாயா…!” என்று திகைத்துப் போனான் தேனப்பன். அவன் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. ராமநாதனோ தனக்கு கவிதை எழுதத் தெரியாதே என்று வருத்தத்தில் ஆழ்ந்துப் போனான்.

“நம் வகுப்பில் யாருக்காவது கவிதை எழுதத் தெரியுமா? இந்த கவிதைப் போட்டியில் யாராவது கலந்துக் கொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டார் ஆசிரியர்.

ராமநாதன் உட்பட எல்லா மாணவ மாணவியர்களும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர்.

நம்ம தேனப்பன் மட்டும் சட்டென்று எழுந்து, “நான் கலந்துக் கொள்கிறேன் சார்!” என்றான்.

ஆசிரியரே கொஞ்சம் திடுக்கிட்டுப் போனார்!

‘நீயா? உனக்கு தமிழில் ஒரு வரிக்கூட தப்பில்லாமல் எழுத தெரியாதேடா!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

“சரி தேனப்பா, உனக்குப் பிடித்த கவிஞர் யார்?” என்று ஆசிரியர் கேட்டார். மகாகவி பாரதியாரில் ஆரம்பித்து பாரதிதாசன், சுரதா, கண்ணதாசன், வாலி, வைரமுத்து அல்லது அழ. வள்ளியப்பா, பூவண்ணன் என்று யாரையாவது அவன் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் தேனப்பனோ,

“எனக்கு பிடித்த கவிஞர் காரைக்கால் அம்மையார்!” என்றான்.

ஆசிரியர் திடுக்கிட்டு நாற்காலியிலிருந்து கீழே விழப்பார்த்தார்.

காரைக்கால் அம்மையரா? ஆசிரியருக்கே அவர் கவிஞராயென்ற சந்தேகமும் குழப்பமும் வந்துவிட்டது!

தேனப்பன் மீது தப்பில்லை! இரண்டு நாளைக்கு முன்புதான் அவன் ஒரு டிவி சேனலில் ‘காரைக்கால் அம்மையார்’ என்ற சினிமாவை பார்த்திருந்தான். அதில் கணீரென்ற வெண்கல குரலில் கே.பி.சுந்தரம்பாள் ஐந்து நிமிஷத்திற்கு ஒரு பாட்டு பாடியிருந்ததால், அவங்க மீது அவனுக்கு ஒரு ஆச்சரியம் கலந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது!

“சரி…சரி… தேனப்பா, நீ இயற்கை என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி வந்து நாளைக்கு என்னிடம் காட்டு!” என்று சொல்லிவிட்டு, அப்படியே நாற்காலியில் சாய்ந்து விட்டார் ; ஐயோ பாவம் அவர்!

காலை நேரம். தேனப்பன் கவிதை எழுதலாமென்று பேப்பர் பேனாவையெல்லாம் எடுத்துக்கொண்டு, தனது வீட்டு வாசலுக்கு வந்து திண்ணையில் உட்கார்ந்தான்.

‘இயற்கை’ என்ற தலைப்பை எழுதினான்.

அடுத்து என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

அப்போது அருகேயிருந்த ஆலமரத்திலிருந்து குயில் ஒன்று கூவிக்கொண்டிருந்தது.

தேனப்பன் அதை அப்படியே எழுதிக்கொண்டான். அடுத்து பக்கத்திலிருந்த அரச மரத்திலிருந்து காக்கை ஒன்று கத்தியது. அதையும் அப்படியே எழுதிக்கொண்டான். அப்புறம் வார்த்தைகளை கீழே மேலே உடைத்துப்போட்டு மாற்றி வேறொரு தாளில் எழுதிக்கொண்டான்.

புதுக்கவிதை மிகவும் இயற்கையாக வந்திருப்பதாக அவனுடைய சிற்றறிவுக்குத் தோன்றியது.

அப்போதுதான் அவனுக்கு எழுத்தாளர்கள் புனைப்பெயரில் எழுதுவார்கள் என்பது ஞாபகத்திற்கு வந்தது. என்ன புனைப்பெயர் வைத்துக் கொள்வது என்று யோசித்தான். அவனுடைய அம்மா அவனை, ‘அழகு…அழகு…’ என்று எப்போதும் அன்பாக கூப்பிடுவது அப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்புறமென்ன, ‘தேனழகு’ என்ற புனைப் பெயரைக் கண்டுப்பிடித்து, அந்த கவிதை ( ? )க்கு கீழே தேனழகு என்று எழுதிக் கொண்டான். அவனுக்கு தானும் ஒரு கவிஞனாகி விட்டோம் என்று ஒரே சந்தோஷமாக இருந்தது!

அன்று ஆசிரியர் சண்முகத்திற்கும் அவரது மனைவிக்கும் கடுமையான சண்டை. அந்தக் கோபத்துடன் ஆசிரியர் சண்முகம் வகுப்புக்குள் அப்போதுதான் வந்தார். உடனே தேனப்பன், “சார் நான் கவிதை எழுதி எடுத்து வந்திருக்கிறேன்!” என்று தான் எழுதியிருந்த காகிதத்தை எடுத்துப் போய் ஆவலுடன் அவரிடம் காட்டினான்.

அதை வாங்கிப் படித்துப் பார்த்த ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார். அந்த காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது!

இயற்கை ஆள மறத்தில் குயிள் குவியது. அறச மறத்தில் ககம் கத்தீயது.

– தேனழகு.

அப்படியே தேனப்பனை இழுத்து நன்றாக குனிய வைத்து அவன் முதுகிலேயே பட்…பட்டென்று நாலு அடிக் கொடுத்தார்!

பாவம், அந்த இளம் கவிஞன் வலியால் துடித்துப் போனான்!

“எழுதியிருப்பது நாலுவரி! அதில் வார்த்தைக்கு வார்த்தை தப்பு” என்று சொல்லியபடி மறுபடியும் அவன் காதைப்பிடித்து திருகினார். அப்போது அவருக்கு மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற அறிவுரை ஞாபகத்திற்கு வரவே, அவனை அடிப்பதை விட்டு விட்டு, “கவிதையாடா இது?” என்று உறுமினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமநாதனுக்கு ஒரே சிரிப்பாக வந்தது.

‘பரிசா வேணும்…பரிசு! இதுதான் உனக்கு பரிசு!’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அந்தக் கவிதையைக் கிழித்து தேனப்பன் முகத்தில் வீசியெறிய நினைத்த அவருக்கு அந்த கவிதையின் கீழேயிருந்த ‘தேனழகு’ என்ற பெயர் கண்ணில் பட்டது!

“இது யாருடா தேனழகு? நம்ம கிளாஸ் தேன்மொழியா?” என்றார்.

“இல்லை சார், எழுதுறவங்களெல்லாம் புனைப் பெயர் வைத்துக் கொள்வார்களே என்று நான் வைத்துக் கொண்டேன்!” என்றான் பரிதாபமாக.

அதற்குள் ஆசிரியரின் கோபம் கொஞ்சம் குறைந்துப் போயிருந்தது. அவனது அந்த கவிதை ( ? )யை கிழித்து அவன் முகத்திலேயே வீசியெறிய நினைத்த அவர், ‘நமக்கு ஏன் இந்த பாவம்! இந்த எழுத்துப் பிழையை மட்டும் திருத்திக்கொடுப்போம்’ என்ற முடிவுக்கு வந்தார்.

*****

இயற்கை

ஆல மரத்தில் குயில் கூவியது.

அரச மரத்தில் காகம் கத்தியது.

க.தேனப்பன்,

ஆறாம் வகுப்பு, ‘இ’ பிரிவு.

என்று தேனப்பனையே திருத்திப் பிழையில்லாமல் வேறொரு தாளில் எழுத வைத்தார்ஆசிரியர் சண்முகம்!

“தமிழாசிரியர் தாமோதரன் நம்ம பள்ளிக்கூடத்து ஆபீஸ் ரூமிலே இருக்கார். அவரிடம் நீ எழுதிய இந்தக் கவிதையைப் பொன்விழா மலருக்கு கவிதை என்று சொல்லி கொடுத்து விட்டு வா!” என்று ஆசிரியர் தேனப்பனை அனுப்பி வைத்தார்.

தேனப்பன் அந்த பள்ளிக்கூடத்தின் ஆபீஸ் ரூமுக்கு சென்றபோது, அதன் வாசலில் ஹெட் மாஸ்டர் நின்றுக் கொண்டிருந்தார்.

கவிதையுடன் சென்ற தேனப்பன் பயந்துப்போய் நின்றான்.

‘இவரும் நம்மை அடிப்பாரோ?’ என்று தனது ஆந்தை விழிகளை உருட்டி சந்தேகத்துடன் பார்த்தான்.

தேனப்பனைப் பார்த்து, “என்னடா? என்ன வேணும்?” என்றார் ஹெட் மாஸ்டர்.

“கவிதை எழுதி, எடுத்து வந்திருக்கேன் சார்!” என்றான் கொஞ்சம் நடுங்கும் குரலில்!

அந்த ஹெட் மாஸ்டருக்கு ஆச்சரியம்! ‘ஆறாவது படிக்கும் ஒரு பொடியன் கவிதை எழுதி எடுத்து வந்திருக்கானே’ என்ற சந்தோஷத்துடன் ,

” இங்கே கொடு, பார்க்கலாம்!” என்று வாங்கினார்.

கவிதை அவருக்கு புரிந்தும் புரியாமல் இருந்தாலும், ‘இயற்கையை பற்றி இந்த சிறுவன் இவ்வளவு ஆர்வமாக தனக்குத் தோன்றியதை எழுதி எடுத்து வந்திருக்கானே’ என்று அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அப்போது தனது மேஜையின் மீது இருந்த, யாரோ தன்னை பார்க்க வந்தவர்கள் கொடுத்துவிட்டு சென்றிருந்த ‘டைரி மில்க்’ சாக்லேட்டும், ‘உலக விஞ்ஞானிகள்’ என்ற புத்தகமும் அந்த ஹெட் மாஸ்டர் கண்ணில் பட்டது.

அந்த புத்தகத்தையும் அந்த சாக்லேட்டையும் எடுத்து தேனப்பனிடம் கொடுத்துவிட்டு, “வெரி குட்! நல்லா படிக்கணும்” என்று அன்போடு முதுகில் தட்டிக் கொடுத்தார். அது அரை மணி நேரத்துக்கு முன்பு அதே கவிதைக்காக அடிவாங்கிய அதே முதுகு!

அப்போது அங்குவந்த தமிழாசிரியரைப் பார்த்த ஹெட் மாஸ்டர், “தாமோதரன் இங்கே வாங்க! இந்த கவிதையை பொன்விழா மலருக்கான பைலில் வைத்து விடுங்கள்” என்று அவரிடம் கொடுத்தார்.

தேனப்பன் டைரிமில்க் சாக்லேட்டுடனும் புத்தகப் பரிசுடனும் தனது வகுப்புக்கு துள்ளிக்குதித்து வந்தான்.

நடந்ததை கேட்ட அவனது ஆசிரியருக்கு ஆச்சரியமாக இருந்தது!

ராமநாதனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது.

‘என்ன இந்த மக்கு பயலுக்கு அதிர்ஷ்டம் இப்படி அடிக்குதே!’ என்று நினைத்துக் கொண்டான்.

வாரங்கள் பல ஓடியது. அந்த பள்ளிக்கூடத்தில் பொன்விழா வேலைகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தன.

ஒருநாள் அந்த ஆறாம் வகுப்பு ‘சி’ பிரிவில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கே தமிழாசிரியர் தாமோதரன் வந்தார். தாமோதரன் ஏதோ சொல்ல, அதைக்கேட்ட சண்முகம் ஆசிரியருக்கு ஒரே ஆச்சரியம்!

“இவனுக்கா? ஆச்சரியமாக இருக்கே!’ என்றார் சண்முகம் ஆசிரியர்.

“அந்த சினிமா கவிஞன் சரியான போதை ஆசாமி. அவரே போட்டியை அறிவிக்கிறார். அவரே பரிசைக் கொடுக்கிறார். நமக்கென்ன வந்தது?” என்றார் தமிழாசிரியர் தாமோதரன்.

அதன்பிறகு இருவரும் மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு, தமிழாசிரியர் தாமோதரன் வெளியே சென்றபிறகு, சண்முகம் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, “எல்லோரும் இங்கே கவனியுங்கள். நமது வகுப்புக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் கிடைத்திருக்கு!” என்றார்.

மாணவர்கள் ஆர்வத்துடன் ஆசிரியர் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தனர்.

“நம் பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கிடையே நடந்த பொன்விழா கவிதைப் போட்டியில், நம் வகுப்பை சேர்ந்த தேனப்பன் மிகச் சிறந்த கவிதையை எழுதியதற்காக சிறப்பு பரிசு ஆயிரம் ரூபாயை ஜெயித்திருக்கிறான். அவனது புகைப்படம் பொன்விழா புத்தகத்தில் அவனது கவிதையுடன் வெளிவரும். அவனுக்கு ஆயிரம் ரூபாய் பரிசை சினிமா பாடலாசிரியர் மலரவன் பள்ளிக்கூட விழாவில் வழங்குவார்” என்றார்.

அதைக் கேட்டதும் தேனப்பனுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆச்சரியம்! திகைத்துப் போனான். தனக்கு ஆயிரம் ரூபாய் பரிசுக்கிடைத்தற்கு தான் வணங்கும் திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டான்.

அதேசமயம் அவனுக்கு பக்கத்திலிருந்த ராமநாதனுக்கு அதிர்ச்சி. ‘இவனுக்கா, இந்த மக்கு தேனப்பனுக்கா பரிசு?’ என்று அதிர்ச்சியில் அப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

‘அவன் ஜெயித்ததற்கு இவன் ஏன் மயங்கி விழுகிறான்’ என்று நினைத்தபடி, “ராமநாதன் முகத்தில் தண்ணியை எடுத்து வந்து தெளிங்கடா!” என்று பதறினார் ஆசிரியர்.

ராமநாதனுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மயக்கமாக வருகிறதா? இதுதான் நடந்தது!

போட்டிக்கு வந்த கவிதைகளையெல்லாம் சேகரித்து, ஒரு கூரியரில் சினிமா பாடலாசிரியர் மலரவனுக்கு அனுப்பியிருந்தது அந்த பள்ளி நிர்வாகம். மொத்தம் 84 கவிதைகள் வந்திருந்தன. ஆறாம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரை எழுதியிருந்தார்கள்.

இயற்கை என்ற பொருளில் எழுதவேண்டும் என்று சொல்லியிருந்ததால் கதிரவன், நிலா, கடல், அருவி, ஆறு, மரங்கள்,பறவைகள் என்று பலவற்றை விதம் விதமாக எழுதியிருந்தார்கள். ஒரு மாணவன் வேப்பமரத்தைப் பற்றி அதன் பயனைப்பற்றி கூட கவிதை எழுதியிருந்தான்!

அவற்றையெல்லாம் அரைப்போதையில் படித்து வந்தார் அந்த சினிமா பாடலாசிரியர் மலரவன். அப்போதுதான் ‘இயற்கை ஆல மரத்தில் குயில் கூவியது அரச மரத்தில் காகம் கத்தியது’ என்ற தேனப்பனின் கவிதை அவர் கண்ணில் பட்டது.

படித்துப் பார்த்தவர் திகைத்துப் போய்விட்டார்!

ஆல மரத்தில் குயில் கூவுவதற்கும், அரச மரத்தில் காகம் கத்துவதற்கும் என்ன சம்பந்தம்? ‘கவிதை இயற்கையாக இருக்கிறது, இதில் என்ன பொருள் இருக்கிறது?’ என்று சிந்தித்தார், சிந்தித்தார்,அவர் அப்படி சிந்தித்தார்! ஒரு ஆழ்ந்த உள் பொருள் இல்லாமல், ஒரு சிறுவன் இப்படி எழுதியிருக்க மாட்டான் என்று நினைக்க ஆரம்பித்தார் அந்த கவிஞர் மலரவன்.

ஐயோ பாவம்! அவருக்கு தேனப்பன் ஏதோ மனம் போன போக்கில் எழுதியிருக்கிறான் என்பது கொஞ்சமும் தெரியாது!

அவர் மனம் குயிலின் வாழ்க்கை முறை, காக்கையின் வாழ்க்கை முறையை பற்றியெல்லாம் விஞ்ஞானப் பூர்வமாக அலச ஆரம்பித்தது.

“குயில் ஏன் கூவுகிறது? காகம் ஏன் கத்துகிறது? குயில் ஏன் கூவுகிறது? காகம் ஏன் கத்துகிறது?” என்று வாய்விட்டு சொல்லியபடியே கவிஞர் மலரவன் வீட்டிலேயே அங்கும் இங்குமாக நடக்க ஆரம்பித்தார்! அவர் மனைவி மயில்விழி கூட தன் கணவருக்கு ஏதாவது மனப் பிரச்சனையோ என்று பயப்பட ஆரம்பித்து விட்டார்.

அப்போதுதான் அந்தக் கவிஞர் மலரவன் மனதில் ஒரு பொறி தட்டியது.

குயில்கள் சொந்தமாக கூடு கட்டுவதில்லை. அதனால் அவைகள் முட்டைகளை அடை காப்பதும் இல்லை. பெண் குயில் காக்கை கூட்டில் முட்டையை வைத்துவிடும். தனது முட்டையென்று நினைத்து குயிலின் முட்டையையும் சேர்த்து காகம் அடைகாக்கும். குயில் குஞ்சு காகத்தின் குஞ்சு போலவே இருப்பதால், காகமும் உணவூட்டும். சற்று வளர்ந்த பிறகு காக்கை கூட்டிலிருந்து குயில் குஞ்சு பறந்துவிடும்!

காகத்தின் கூட்டுக்குச் சென்று குயில் முட்டையிடுவது எளிதல்ல. குயில்கள் முட்டையிடும் சமயத்தில் முதலில் முட்டையிடப்பட்டிருக்கும் காகத்தின் கூட்டை கண்டுபிடிக்கும். அதன்பிறகு அருகேயிருக்கும் மரத்திலிருந்து ஆண் குயில் கூவத்தொடங்கும்.குயிலின் கூவல் சத்தம் காகங்களை கோபம் கொள்ளச் செய்யும். ஆண் பெண் காகங்கள் இரண்டும் சேர்ந்து அந்த ஆண் குயிலை கோபத்துடன் கத்திக்கொண்டே விரட்ட தொடங்கும். அந்த ஆண் குயிலும் அந்த இரண்டு காகங்களையும் போக்குக்காட்டி வெகுதூரத்திற்கு அழைத்துப் போய்விடும். இந்த நேரத்தில் காகத்தின் கூட்டிற்கு அருகிலுள்ள மரத்தில் மறைந்திருக்கும் பெண்குயில் சத்தம் இல்லாமல் சென்று காகத்தின் கூட்டில் முட்டை ஒன்றை இட்டுவிட்டு சென்றுவிடும். அப்படி செல்லும்போது அந்த பெண் குயில் காகத்தின் முட்டை ஒன்றை கீழே தள்ளி உடைத்துவிட்டு சென்றுவிடும். இந்த செயல் பல லட்சம் ஆண்டுகளாக இந்த உலகில் இயற்கையாக நடந்துக்கொண்டேயிருக்கிறது.

குயில்களினால் தனது முட்டைகளுக்கு ஆபத்து என்பதை காகமும் இயல்பாகவே உணர்ந்துதான் இருக்கிறது. ஆனாலும் ஏமாந்து விடுகிறது. அதனால்தான் தான் முட்டையிட்டிருக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் மரத்திற்கு அருகே வந்து குயில் கூவும்போது காகமும் பயந்து கத்த ஆரம்பிக்கிறது.

‘அட, இந்த இயற்கை நிகழ்வைதான், ‘ஆல மரத்தில் குயில் கூவியது. அரச மரத்தில் காகம் கத்தியது’ என்று எளிமையாக சுருக்கமாக ஆழ்ந்த உட்பொருளுடன் தேனப்பன் என்ற இந்த கிராமத்து சிறுவன் எழுதியிருக்கிறான் ‘என்று ஆச்சரியப் பட்டார் அந்த சினிமா கவிஞர் மலரவன்.

அப்படியே அசந்துப் போனார். அப்புறமென்ன; அந்த கவிதைப்போட்டிக்கான சிறப்பு பரிசு ஆயிரத்தை தேனப்பன் எழுதிய கவிதைக்கே தந்துவிட்டார்!

என்ன உங்களுக்கு மயக்கம் வருவது போலிருக்கிறதா? எனக்கும்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *