செய்திகள் நாடும் நடப்பும்

தேஜஸ்சில் 30 நிமிடங்கள் பறந்து நவீனங்கள் கண்ட பிரதமர் மோடி ஆனந்தம்

* போர் விமானங்கள் தயாரிப்பில் புரட்சி * முற்றிலும் இந்தியர்கள் கைவண்ணம்


ஆர்.முத்துக்குமார்


ஒலியை விட இரண்டு மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் சக்தி வாய்ந்த தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி அரைமணி நேரம் பறந்து மீண்டும் பத்திரமாக தரையிறங்கி இருக்கும் செய்தியும் தகவல்களும் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவிக்கொண்டு இருக்கிறது.

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தபோது பிரதமர் மோடி தான் அனுபவித்த வெற்றி பயணத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்த செய்தி ‘இது நம் உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது, நமது சுயசார்பு திறன் பெருமிதத்தையும் நம்பிக்கையையும் தருகிறது என்று கூறியுள்ளார்.

விமான வடிவமைப்பில் முனைந்து இருப்பது அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா, பிரான்சு, இங்கிலாந்து, ஸ்பெயின், கனடா ஆகிய நாடுகள் மட்டுமே. இவற்றில் ஒலி வேகத்தில் பறக்கும் விமானங்களை தயாரிக்கும் திறன் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்சு மற்றும் இங்கிலாந்திடம் மட்டுமே இருந்த பட்டியலில் நாமும் வெற்றிகரமாக நுழைந்து விட்டோம்.

எச்.ஏ.எல் நிறுவனம் அண்மையில் 2 இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் போர் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. பெங்களூருவில் பிரதமர் மோடி அந்த விமானத்தை பார்வையிட்டார். பின்னர் பாதுகாப்பு உடை, பறப்பதற்கான தலைக்கவசம் ஆகியவை அணிந்து, இலகு ரக தேஜஸ் போர் விமானத்தில் விமானப்படை விமானிகளுடன் பயணித்தார். நடுவானில் பறக்கும் போது கைகளை உற்சாகமாக அசைத்தவாறு வெற்றி சின்னத்தையும் அவர் காட்டினார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் தேஜஸ் போர் விமானத்தில் வெற்றிகரமாக பயணித்தேன். இதில் பயணித்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. நமது சுயசார்பு திறன் எனக்கு பெருமிதத்தையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிற‌து என பதிவிட்டுள்ளார்.

பெரிய நிறுவனங்களின் கோட்டையாக இருக்கும் விமான தயாரிப்பு துறையில் இந்தியா நுழைந்து அதில் சாதித்து இருப்பது பிரமிப்பை தருகிறது. உலகமே அதிசயித்துப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதில் சாதிக்கும் வல்லமையை பெற வைத்ததில் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவிகள் அதிமுக்கிய பங்கும் இருக்கிறது.

தேஜஸ் போர் விமானத்தின் தயாரிப்புக்கு இந்துஸ்தான் ஏரோனோடிக்ஸ் என்ற நிறுவனத்தை 1980களில் துவக்கி டி.ஆர்.டி.ஓ. அமைப்பின் கட்டுப்பாட்டில் முன்னணி ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பித்தது. 1985 இலகு ரக போர் விமானத்தை உருவாக்க ஜி2 உதவியை பெற்றது.

அடுத்து உருவான பல்வேறு மாதிரிகள் சரிவர இயங்கும் விமானமாக மாற முடியாமல் இருந்தது.

1995ல் ஒருவித முழுமையான பறக்கும் விமானமாக வடிவமைத்து அதை ஆகாயத்திலும் பறக்க வைத்தாலும் கட்டுப்பாடுகள் சரிவர இயங்காத நிலையில் மீண்டும் பறக்க முடியாது நிலைகுலைந்து தரையில் தான் துவண்டு நின்று விட்டது.

2001ல் தான் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இதை முழுமையான விமானமாக மலர்ந்து பறக்கும் போர் விமானத்தை கண்டார். அவரே இதற்கு ‘தேஜஸ்’ என்று பெயர் வைத்தார்.

அதன் பின் ரஷ்யாவின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளால் ஒலி வேகத்தில் பறக்கும் யுத்த விமானமாக மாறியது.

2006 மார்ச் மாதத்தில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் முதல்முறையாக 16 இச்சிறிய போர் விமானங்களை 2011ல் ஒப்படைக்கும் ஆர்டரை தந்தது.

பிறகு ஏவுகணை ஏவும் திறனையும் பெற்று கடல்களுக்கு அப்பாலும் பறக்கும் திறன் பெற்று முழுமையான ஒரு சிறு போர் விமானமாக சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது.

ஒலி வேகத்தில் பறவைகள் போல் இணைந்து பறந்து 2011ல் சாதனை செய்த தேஜஸ் விமானங்கள் அடுத்த சில நாட்களில் நமது விமான படைக்கு தரப்பட்டு ராணுவ சேவையில் பணியாற்றத் துவங்கியது.

பிறகு பல்வேறு புதுமைகளை வடிவமைப்பில் பெற்று நவீன கருவிகளுடன் உருவான இந்தப் போர் விமானங்கள் முதல்முறையாக 2016ல் பைக்ரைன் விமானக் கண்காட்சியில் பங்கேற்ற போது சர்வதேச நிறுவனங்கள் இதன் பொழிவையும் அருமை பெருமைகளையும் மனம் திறந்து பாராட்டினர்.

பிறகு இந்திய விமான படைக்கு மேலும் நூறு விமானங்கள் தயாரிக்க ஆர்டரையும் பெற்றது.

2018ல் இந்த இலகு ரக விமானம், நடுவானில் பிற விமானத்திற்கு பெட்ரோல் தரும் பணிக்கும் உபயோகிகப்பட ஆரம்பித்தது.

நடுவானில் இரண்டு டன் எடை கொண்ட பெட்ரோல் டேங்கை சுமந்தபடி, உரிய வேகத்தில் இணைந்து பறந்து சக விமானத்தில் பெட்ரோலை நிரப்பி சாதனை செய்தது.

2020ல் துவங்கிய ‘தேஜஸ்’ நமது கடல்படை போர் கப்பல்களின் சிறு விமான தளத்தில் துல்லியமாக, தடுமமாற்றமே இன்றி தரையிறங்கியும் பறந்து செல்வதுமான திறன் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.

தற்போது நம்மிடம் தேஜஸ் விமானங்கள் மட்டுமே கொண்ட போர்ப் படையும் இருக்கிறது. அசூர வேக ஏவுகணைகளையும் ஏந்திச் சென்று ஆகாயத்தில் இருந்து ஏவி பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது.

இந்த நவீன போர் விமானத்தின் பாதுகாப்பான, அசுர வேக பயணத்தை தான் 30 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி அனுபவித்து நமது விமான கட்டுமான திறனை வெகுவாக பாராட்டி உள்ளார்.

இந்த தேஜஸ் இலகு ரக போர் விமானங்களை வாங்க பல நாடுகள் ஆர்வமாக இருக்கிறது. இது நமது ஏற்றுமதி பொருளாதாரத்தை பன்மடங்கு உயர்த்திடும் வல்லமை கொண்டது.

உலக அமைதிக்கு உறுதி சேர்க்க நாம் அணிசேரா நாடாக இருந்தது போல் வல்லரசுகளின் கைப்பாவையாக மாறாமல் நடுநிலை வகிக்கும் நாடுகளுக்கு தேவைப்படுவது இதுபோன்ற நவீன ஆயுதங்கள் என்பதால் அதை நாம் உரிய லாபத்துடன் குறைந்த விலையில் அவர்களுக்கு விற்றால் அது பல வளரும் நாடுகளுக்கு பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் பிற வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட வேண்டியதும் இருக்காது!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *