சிறுகதை

தேசிய கீதம்..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

தமிழ் பேசும் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது தரக்குறைவு பிறமொழிகள் தெரிந்திருப்பது தான் பெருமை என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் வாழும் இந்த மாநிலத்தில் தன் அடையாளத்திற்காக ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார் பரந்தாமன்.

அவருக்கு எழுதுவது என்பதை விட அந்தப் புத்தகத்தை வெளியிடுவது தான் பெருமை என்று நினைத்திருந்தார். அதன்படியே அந்தப் புத்தகத்தை தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்களை வைத்து வெளியிடவும் ஏற்பாடு செய்திருந்தார் .குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கத்தில் விழா நடத்தப்பட்டது .பிரபலமானவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார்கள். மேடையில் ஏறாதவர்கள் எல்லாம் பிரபலமானவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பார்வையாளர்களும் அமர்ந்திருந்தார்கள் .

விழா தொடங்கிய போது, தமிழ்த் தாய் வாழ்த்து மறந்துபோனது தமிழ்த் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று மேடையில் இருந்த ஒரு பெரியவர் சொல்ல, தமிழ்த் தாய் வாழ்த்து பாட மறந்து விட்டோம்; மன்னிக்கவும் என்று மன்னிப்புக் கோரியபடியே விழா ஆரம்பமானது. தவறில்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்கள். விழா நடந்து முடிந்தது. பிரபலங்கள் நகைச்சுவையாகவும் கருத்தாகவும் பேசினார்கள். இறுதியாக விழா நடந்து முடிந்த போது, தேசிய கீதம் என்று விழாவை நடத்திக் கொண்டிருந்தவர் சொல்ல, எல்லோரும் தேசிய உணர்வோடு எழுந்து நின்று “ஜன கன மண” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்கள். பார்வையார் பாடும் கம்பீரமான குரலுக்கு மத்தியில் ஒரு குழந்தையின் குரல் கேட்டது.

அந்தச் குழந்தைக்கு இப்படி ஒரு தேசிய உணர்வா? யார் அந்தக் குழந்தை என்று திரும்பாமல் காதை மட்டுமே கவனமாகத் தீட்டிக் கேட்டான் குணசீலன் .

தேசிய கீதம் பாடும்போதும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போதும் கம்பீரமாக நின்று வேறு கவனத்தை சிதைக்காமல் பாடுவதுதான் நம் நாட்டுக்குச் செய்யும் மரியாதை. அக்கம் பக்கம் பார்க்காமல் பாட வேண்டும். இது தான் நாட்டுக்கு நாம் செய்யும் மரியாதை.

ஆனால் அந்தக் குழந்தை பாடும் குரலில் ஒரு தெய்வீகமும் நாட்டுப் பற்றும் அடங்கி இருந்தது . திரும்பிப் பார்க்கலாம் என்று நினைத்தால் தேசியம் குணசீலனைத் தடுத்தது .

அந்த மழலையின் குரல் குணசீலனை என்னவோ செய்தது. கூட்டத்தில் இருப்பவர்களும் மேடையில் இருப்பவர்களும் தேசிய கீதத்தை சரியாக உச்சரிக்கிறார்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அந்தக் குழந்தை அவ்வளவு அச்சர சுத்தமாகப் பாடிக் கொண்டிருந்தது. சரி என்னதான் ஆகட்டும்; திரும்பித்தான் பார்க்கலாம் என்று முடிவு எடுத்து குரல் வரும் திசையை நோக்கித் திரும்பினான் குணசீலன்.

தமிழ்த் தாய் வாழ்த்து ,தேசிய கீதத்திற்கு எழுந்து தான் ஆக வேண்டுமா ? இல்லை தமிழ்த் தாய் வாழ்த்து தேசிய கீதம் ஒலித்தால் மட்டும்தான் நாட்டுப்பற்று இருக்குமா? என்று வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அந்தக் குழந்தை ஒரு தகப்பனின் தோளில் அமர்ந்தபடியே பாடிக் கொண்டிருந்தது .இதைச் சற்றும் எதிர்பார்க்காத குணசீலனுக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது .அவன் திரும்பிப் பார்த்தபோது குணசீலனைப் பார்த்துக் கையை ஆட்டிச் சிரித்தது அந்தக் குழந்தை. தேசிய கீதம் பாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. மனதில் இருக்கும் மரியாதை, நாட்டின் மீது இருக்கும் பற்று, நம்மிடம் சரியாக இருந்தால் திரும்பிப் பார்ப்பதும் தகப்பன் தோளில் ஏறிக்கொண்டு தேசிய கீதம் பாடுவது தவறில்லை என்று நினைத்த குணசீலன், அந்தக் குழந்தையைப் பார்த்தபடியே தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தான். குழந்தையின் தகப்பன் வேறு திசை திரும்பவில்லை. நேராகப் பார்த்துக் கொண்டு தேசிய கீதத்தைப் பாடிக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லாம் வாய்விட்டு தேசிய கீதம் பாடி கொண்டிருக்கும்போது அந்த குழந்தையும் அதே போல் பாடியது. குணசீலனும் பாடிக்கொண்டிருந்தான்.

ஜெய ஜெய ஜெய ஹே

என்று பாடி முடிக்கும் வரை அந்தக் குழந்தையும் குணசீலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இருவரின் கவனமும் கொஞ்சமும் சிதறி விடாமல் இருந்தது. தேசிய கீதம் அந்த விழாவில் மரியாதையாக பாடப்பட்டு தேசிய பற்றோடு முடிக்கப்பட்டது.

குழந்தையின் ஆர்வமும் குணசீலன் பாடிய விதமும் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை; அவர்கள் உயிரோடு தான் அது கலந்திருந்தது என்று விழாவில் கலந்து கொண்ட சிலர் இவர்களைப் பார்த்துப் பேசிக் கொண்டார்கள்.

விழா முடிந்து ஆட்கள் கலைந்து சென்று கொண்டிருந்தார்கள்.

“ஜெய ஹே… ஜெய ஹே…ஜெய ஜெய ஜெய ஹே “.

என்ற தேசிய கீதத்தின் கடைசி வரிகளை அந்தக் குழந்தை முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *