செய்திகள்

தேசிய ஊரக வேலைத்திட்டம் குறித்து ராகுல் காந்தியுடன் விவாதிக்க தயார்

ஊரக வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் சவால்

டெல்லி, பிப். 19–

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தியுடன் விவாதிக்க தயார் என மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைமையிலான மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் அடித்தளமாக உள்ள ஊரக வேலைத் திட்டம் மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சாடியிருந்தார்.

அமைச்சர் சவால்

இந்நிலையில், 2004-14 ஆண்டுக் காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மற்றும் கடந்த 9 ஆண்டு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சிக் காலத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம் ஆகிய இரண்டு அம்சங்கள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதிக்கத் தயார் என ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்தார்.

உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் நடந்த சரஸ் மேளா நிகழ்ச்சிக்கு இடையே பேசிய கிரிராஜ் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 33,000 கோடியைத் தாண்டவில்லை என்றும், பெரும்பாலான நிதி ஆண்டுகளில், கிராமப்புற வேலைத் திட்டத்தை மோசமாகச் செயல்படுத்தியதால் அந்த நிதியிலும் குறிப்பிட்டத் தொகை திரும்பி வந்தது என்றும் கிரிராஜ் சிங் கூறினார்.

அதேசமயம், பிரதமர் மோடி பொறுப்பேற்ற மே 2014 முதல், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் மதிப்பீட்டை விட திருத்தப்பட்ட மதிப்பீடு அதிகமாக உள்ளது. 2019-20 நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீடு ரூ.60,000 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.71,000 கோடியாகவும் இருந்ததாக அவர் கூறினார். 2020-21-ல் ரூ.61,500 கோடி பட்ஜெட் மதிப்பீடு எனவும் ஆனால் செலவு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்தது என்றும் இந்த ஆண்டும் ரூ.73,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு எனவும், ஆனால் அதன் செலவு ஏற்கெனவே ரூ.89,400 கோடியைத் தொட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *