செய்திகள்

தேசிய அளவில் இடைநிலைக்கல்வி இடைநிற்றல் விகிதம் 12.6 சதவீதம்

குஜராத், பீகார், அசாம், மேகாலயாவில் மிக அதிகம்

டெல்லி, ஜூன் 13–

தேசிய அளவில் இடைநிலைக் கல்வி மாணவர்கள் இடைநிற்றல் விகித சராசரி 12.6-ஆக உள்ளதென ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத், பிகார், கா்நாடகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசு செயல்படுத்தி வரும் கல்வித் திட்டத்தின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் சார்பில் மார்ச் முதல் மே மாதம் வரையில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட கூட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, ஆய்வறிக்கை தயாரித்தனர்.

அதில், தேசிய அளவில் கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் இடைநிலைக் கல்வி அளவில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் சராசரியாக 12.6 சதவீதமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, 7 மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்ததெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 மாநிலங்களில் அதிகம்

பீகாரில் இடைநிலைக் கல்வி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 20.46-ஆகவும், குஜராத்தில் 17.85-ஆகவும், அசாமில் 20.3-ஆகவும், ஆந்திரத்தில் 16.7-ஆகவும், பஞ்சாபில் 17.2-ஆகவும், மேகாலயத்தில் 21.7-ஆகவும், கர்நாடகத்தில் 14.6-ஆகவும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தொடக்கக் கல்வி அளவில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ள போதிலும், அது மேலும் குறைய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவா்கள் இடைநிற்றல் விகிதம் 11.2-இல் இருந்து 10.7-ஆகக் குறைந்துள்ளது. ராஜஸ்தானிலும் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும், பழங்குடியினர், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இடைநிற்றல் விகிதம் அதிகமாகவே உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் தேசிய அளவில் 33 சதவீதமாக உள்ளதாக யுனிசெஃப் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *