வேலூர், ஆக. 5–
தெலுங்கு தேசம் – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையேயான ஏற்பட்ட மோதலால், வேலூரிலிருந்து ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்திலுள்ள புரபாலகோட்டா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.
கடைகள் சேதம்
இதில், காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயமடைந்தனர். மேலும் காவல் துறை வாகனங்கள் உள்பட ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனைக் கண்டித்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், ஆந்திர எல்லை சாலைகளில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழ்நாட்டிலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முடங்கியதால் வார இறுதி நாள்களில் திருப்பதி செல்ல இருந்த பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். முழு அடைப்புப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.